கலைக்கு மொழி இல்லை, இனம் இல்லை, மதம் இல்லை. அண்மையில் எமக்கு ஏற்பட்ட பேரிடரின்போது எவ்வாறு இனம், மதம் பாராது மனிதத்தை மட்டும் முன்னிறுத்தி அனைவரும் உதவினார்களோ, அதேபோன்று கலைகளும் மனிதர்களை ஒன்றிணைக்கும் பாலமாக அமைகின்றன, என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட பண்பாட்டுப் பெருவிழாவும், பாரம்பரியக் கண்காட்சியும் இன்று செவ்வாய்க்கிழமை (16.12.2025) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், தமிழ் மக்களின் பாரம்பரிய வாள் நடனம் மற்றும் கரகாட்டத்துடன், எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் இஸ்லாமிய ‘ஹசீதா’ கலை வடிவமும், வவுனியா தெற்கு துஸ்யந்த கலைமன்றத்தின் சிங்கள ‘கண்டிய நடனமும்’ ஒரே மேடையில் அரங்கேற்றப்பட்டமை சபையினரை மெய்சிலிர்க்க வைத்தது. இது குறித்துப் பேசிய ஆளுநர், இக்காட்சியானது வேற்றுமைகளைக் கடந்த மனிதநேயத்தின் அடையாளம் எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும் தெரிவித்த ஆளுநர், இன்றைய பிள்ளைகளுக்குச் ‘சுவாசிக்க’ கூட நேரமில்லை. விடியற்காலையில் தொடங்கி இரவு வரை புத்தக மூட்டைகளுடனும், டியூசன் வகுப்புகளுடனும் அவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்குப் பொழுதுபோக்க நேரமும் இல்லை, இடமும் இல்லை. எஞ்சிய நேரத்தில் கைப்பேசிகளின் குட்டித் திரைக்குள் அவர்கள் உலகம் சுருங்கிவிடுகிறது. பல நாடுகளில் சிறுவர்கள் கைப்பேசி பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது போன்று, எதிர்காலத்தில் எமது நாட்டிலும் அத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம்.
மேலும், ‘எமது பிள்ளைகள் தென்னிந்தியத் திரைப்பட மோகத்திலும், சின்னத்திரை தொடர்களிலும் தொலைந்து போயிருக்கிறார்கள். அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து, எமது மண் வாசம் வீசும் கலைகளை நோக்கித் திருப்ப வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் அதே முகங்கள் மேடை ஏறுவதல்ல வெற்றி. தென்னிந்திய சினிமாவைக் காட்டிலும், எமது நாட்டுக்கூத்திலும் கரகாட்டத்திலும் சுவாரஸ்யம் உண்டு என்பதை, இன்றைய ‘2கே கிட்ஸ்’ எனப்படும் இணையத் தலைமுறையினருக்குப் புரியவைக்கப் புதிய யுக்திகளைக் கையாள வேண்டும். இளையோரை வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிடாமல், அவர்களைப் பங்களிப்பாளர்களாக மாற்ற வேண்டும்.
மழைக் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதிலுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் காலங்களில் மாகாண பண்பாட்டுப் பெருவிழாவை ஓகஸ்ட் மாதத்துக்குள் நடத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கு ஏதுவாகப் பிரதேச மற்றும் மாவட்ட மட்ட விழாக்களைத் திட்டமிடுமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
பாரம்பரிய முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பழமை வாய்ந்த பொருட்கள், கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் நூல்கள் அடங்கிய கண்காட்சிக் கூடத்தை விருந்தினர்கள் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர், கூட்டுறவுத்துறைப் பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க ஆகியோர் ஆளுநருடன் பிரதம விருந்தினர்களாகப் பங்கேற்றனர். மேலும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், பெருந்திரளான கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

















