பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குத் திருப்பும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (16.12.2025) செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 284 பாடசாலை மாணவர்களுக்கு தலா மூவாயிரம் (3,000) ரூபா பெறுமதியான கற்றல் உபகரணப் பொதிகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, மாவட்டச் செயலகத்துக்கு பல்வேறு கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நன்கொடைகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் அனைத்து மாணவர்களுக்கும் இக்கற்றல் உபகரணங்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர், கண்டாவளை பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலைச் சமூகம் சார்ந்தோர் கலந்துகொண்டனர்.