கலப்பின சோளப் பயிர்செய்கை( MIMZ 4) அறுவடைவிழா

மன்னார் மாவட்டத்தின் அகத்திமுறிப்பு விவசாயப்போதனாசிரியர் பிரிவில் அகத்திமுறிப்பு அளக்கட்டு கிராமத்தில் மேட்டு நிலங்களில் சோளப் பயிர்ச்செய்கை அறுவடை விழா திரு.ஆ.யு.ஆ. அம்ஜத் எனும் விவசாயியின் நிலத்தில் 03.07.2025 அன்று நடைபெற்றது. இவ்வயல் விழாவை அகத்திமுறிப்பு விவசாயப்போதனாசிரியர் திருமதி.லோறன்சியா லியோன் தலைமை தாங்கி நடத்தினார். இவ்வயல் விழாவின் விருந்தினர்களாக பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன், பாடவிடய உத்தியோகத்தர்கள்,    விவசாய  போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

விவசாயப் போதனாசிரியர் கருத்து தெரிவிக்கையில் சோளச்செய்கை குறைவான விஸ்தீரணத்திலே செய்கை பண்ணப்படுகின்றது. இதனை அதிகரிக்கும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் கலப்பின சோள விதை வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். அத்துடன் குறைந்த செலவில் அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய பயிர்களில் ஒன்றாக சோளச் செய்கை காணப்படுகின்றது என்பதையும் குறிப்பிட்டார்.

சோளச்செய்கை நிலம் பார்வையிடப்பட்டு நடுகை முறைகள், நீர் முகாமைத்துவம், பசளைப் பாவனை மற்றும் உற்பத்தி செலவு போன்ற விடயங்களை பாட விடய உத்தியோகத்தர் (மறுவயற் பயிர்கள்) திரு.யு.து.மார்க் விளக்கிக் கூறியதுடன் எமது திணைக்களத்தால் சோளச் செய்கையின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்குடன் அண்ணளவாக 75 ஏக்கரிற்கான கலப்பின சோள விதை மன்னார் மாவட்டத்திற்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 0.25 ஏக்கர் பரப்பில் சிறப்பாக செய்கை செய்த விவசாயியைப் பின்பற்றி ஏனைய விவசாயிகளும் சோள செய்கையில் ஈடுபடும் போது நாட்டின் உற்பத்தியை அதிகரித்து மக்களின் நுகர்ச்சித் தேவையை நிவர்த்தி செய்து இறக்குமதியைக் குறைக்க முடியும். இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதுடன் நாட்டின் அன்னிய செலாவாணியையும் மீதப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். அத்துடன் பயிர் மீதிக் கழிவுகளை உரிய முறையில் பதப்படுத்தி விலங்குத் தீவனமாக பயன்படுத்தமுடியும் என்று கூறினார்.

விவசாயியின் அனுபவப் பகிர்வில் சோளச் செய்கையில் அதிக ஆர்வம் செலுத்தியதால் உச்ச இலாபத்தைப் பெற முடிந்தது என்றும் தனது நிலத்தில் மிகக் குறைந்த அளவிலான இரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்றும் மிகக் குறைந்த மூலதனச் செலவு ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது.

தொடர்நது பிரதி விவசாயப் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில் சோளப் பயிர்ச் செய்கைக்கு முக்கியத்துவம செலுத்தும்படியும் அத்துடன் சிறுதானியப் பயிர்களிலும் அதிக ஆர்வம் செலுத்தும்படியும் கூறப்பட்டது. அத்துடன் குறைந்த செலவில் அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய போசணைப் பயிரச்செய்கையில் ஈடுபடுவதன் மூலம் மக்களின் போசணைத் தேவையை நிவர்த்தி செய்யமுடியும் எனவே இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இது போன்ற பயிர்களை பயிர் செய்வதற்கு விவசாயிகள் முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இறுதியில் அகத்திமுறிப்பு விவசாயப் போதனாசிரியரின் நன்றியுரையுடன் வயல் விழா இனிதே நிறைவுற்றது.