கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா 02.10.2019 ஆம் திகதி அன்று உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பண்ணை முகாமையாளர்; க.மதனராஜ் குலாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூறு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். இவ் வயல் விழாவில் வலய உதவிப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், உதவிப் பண்ணை முகாமையாளர், விவசாயப் போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாய்க்கால் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என 80 பேர் வரையில் பங்குபற்றி பயனடைந்தனர்.
இவ் வயல்விழாவின் போது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்கள் தமது கருத்தைத் தெரிவிக்கையில் கபிலநிறத் தத்தியின் தாக்கம் மன்னார் மாவட்டத்தில் கூடுதலாகக் காணப்படுவதற்கு சிபார்சு செய்யப்படாத விதை நெல் அளவு, அதிக பசளைப் பாவனை, பயிர் அடர்த்தி மற்றும் நீர் முகாமைத்துவம் பேணாமை போன்றவை முக்கிய காரணங்களாகக் காணப்படுவதாகவும் தத்தியின் தாக்கத்தினால் 40மூ அறுவடை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். வரும் காலங்களில் காலத்தே பயிர் செய்து தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
இவ்வயல் வழாவின் போது நெற்செய்கையில் விதைத் தெரிவு, விதைப் பரிகரணம், பசளைப் பாவனை, வினைத்திறனான களைகட்டுப்பாடு, நீர் முகாமைத்துவம், பூச்சி, பீடைகளை அடையாளம் கண்டு கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் பதாதைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு பாடவிதான உத்தியோகத்தர்களால் பங்குபற்றுநர்களிற்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் பயிர் அறுவடை மதிப்பீடு செய்முறை மூலம் கணிப்பிடப்பட்டது.
மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய நெல்வயல்களில் கபிலநிறத்தத்தியின் தாக்கம் இல்லாதிருந்தமை விவசாயிகளால் அவதானிக்கப்பட்டு தங்கள் வயல்களிலும் நெற்செய்கையில் உரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியிருந்தார்கள். இதன் மூலம் வயல் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் பல நன்மைகளைப் பெற்றுக்கொண்டார்கள்.