கணுக்கேணி குழாய்க்கிணறு குடிநீர்ப்பிரச்சனை தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்டம் கணுக்கேணி கிராமத்தில் குழாய்க்கிணறு மூலமாக நீரினை அதிகளவில் இராணுவத்தினர் பயன்படுத்துவதால் அந்தப் பிரதேசத்தில் நிலத்தடி நீர் குறைவடைந்து வருவதாக பிரதேச மக்களினால் ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இது தொடர்பில் ஆராயும் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 03 ஒக்ரோபர் 2019 அன்று இடம்பெற்றது.

இதனுடன் தொடர்புடைய கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், இராணுவத்தினர், பிரதேசத்தின் மக்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் இப்பிரச்சனை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது குறித்த கணுக்கேணி கிராமத்தில் நீர் எடுப்பதற்கு மாற்றீடாக நீர் எடுக்கக்கூடிய வேறு மூன்று இடங்களை கண்டறிந்து அதில் மிகப் பொருத்தமான இடத்தினை தெரிவு செய்து அதிலிருந்து நீரினை எடுக்கக்கூடி வழிமுறைகளுக்கு செல்வதற்கு ஆளுநர் அவர்கள் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இதனை ஏற்றுக்கொண்ட சம்பந்தப்பட தரப்பினர் அனைவரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இந்தப்பிரச்சனையை தீர்த்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதான் ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு