“ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான “ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது யாழ் நெடுங்குளம் கிராமத்தில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், யாழ்ப்பாண அரச அதிபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் நண்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆளுநரின் இணைப்பு செயலாளர், மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் பிரதேச செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், “சுபீட்சத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்லும்” அதிமேதகு ஜனாதிபதியினுடைய திட்டத்திற்கு அமைவாக நீண்டகாலமாக கிராமிய மட்டத்தில் உள்ள பிரச்சனையான கிராமிய மக்களையும் வங்கியையும் இணைத்து குறைந்த வட்டியில் இலகுவாக கடன்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய வழிமுறையை அமைத்து கொடுக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், வங்கிகள் கடன் வழங்கும் போது உள்ள சவால்கள் பற்றி கருத்து தெரிவிக்கையில் அனைத்து சவால்களையும் உள்ளடக்கியவாறே இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் இத்திட்டத்தின் மூலம் கடனை எதற்கு பெறுகின்றார்களோ அதற்காக மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்களுடைய அந்த நிகழ்ச்சி திட்டம் அவர்களுக்கு பலனளிக்க கூடியதாகவும் இலாபம் அளிக்கக்கூடியதாகவும் இருப்பதையும் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு அவர்களுடைய நிகழ்ச்சி திட்டம் சார்ந்த தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகளையும் இத்திட்டத்தினூடாக அவர்கள் பெற்றுகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இத்திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென துறைசார் திணைக்களங்களையும், வங்கிகளையும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் நாங்கள் இங்கு வந்திருப்பது உங்களுக்கான ஆதரவு மற்றும் உற்சாகத்தை அளிப்பதற்காக என கூறியதோடு, பிரச்சனைகளுக்கான தீர்வுக்காக நீங்கள் பயணிக்க வேண்டும், உங்களுக்கு பின்னால் உறுதுணையாக நாங்கள் இருப்போம் எனவும் தெரிவித்தார்.