எமது விவசாய உற்பத்திகளை பெறுமதி சேர் விவசாய உற்பத்திப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும். இதன்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வடைவதுடன், விவசாயம் எமது சமூகத்தில் மதிப்பு மிக்க தொழிலாகவும் மாற்றமடையும் என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தெரிவித்தார்.
இமை ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘இமை ஊடக வெற்றிப்படி’ நிகழ்வு உடுப்பிட்டி கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (08.02.2025) இடம்பெற்றது. இதன்போது விவசாயிகள், கலைஞர்கள், மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
பாடசாலை மாணவர்கள் இங்கு நடத்திய பட்டிமன்றம் சிறப்பாக இருந்தது. அவர்களுக்கு சிறு வயதிலேயே இவ்வாறு அறிவூட்டி வளர்க்கவேண்டும். இன்று இளைய சமுதாயம் தவறான வழியில் செல்லும் நிலைமை காணப்படுகின்றது. அவ்வாறு அவர்கள் செல்லாமல் இருக்கவேண்டுமானால் இவ்வாறான நிகழ்வுகள் அவசியம். அதேபோல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிக்க வேண்டும்.
விவசாயிகளை கௌரவிக்கின்ற எந்தவொரு நிகழ்வும் சிறப்பானது. விவசாயத்தை மேம்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம். விவசாய உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும்போதே அல்லது ஏற்றுமதி செய்யும்போதோ விவசாயிகள் கூடுதலான இலாபத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். விவசாயிகள் போதிய விலை கிடைக்காமை மற்றும் விலை உறுதிப்பாடின்மையால்தான் விவசாயத்தை கைவிடுகின்றனர். இதை மாற்றியமைப்பதற்கு இந்தப் பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக ஏற்றுமதி செய்வது சரியானதொரு தீர்வாகும்.
விவசாயிகளுக்கு கடந்த காலங்களில் காணிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதன் உரிமை அப்போதைய அரசாங்கங்களால் வழங்கப்பட்டிருக்கவில்லை. இது விவசாயிகளின் தவறல்ல. அப்படிப்பட்ட விவசாயிகளின் பிள்ளைகள் இப்போது கல்விகற்று சிறப்பான பதவி நிலைகளில் இருக்கின்றனர். அந்தப் பிள்ளைகள் அவ்வாறு சிறப்பான நிலையில் இருப்பதால், காணியின் உரிமை அவர்களுக்கு வழங்கப்படத்தேவையில்லை என்று எமது அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். அது தவறு. விவசாயிகளின் பிள்ளைகளை படித்து முன்னேறக்கூடாதா? அரசாங்கம் அதற்காகவா விவசாயிகளுக்கு காணி வழங்கியது? எங்கள் அதிகாரிகள் ஏன் இவ்வாறான மனநிலையுடன் இருக்கின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை. எங்கள் அதிகாரிகள் புத்தாக்கமாக சிந்திக்கின்றனர் இல்லை. இப்போதைய அரசாங்கம் அவற்றை மாற்றியமைக்கவே விரும்புகின்றது. மக்கள் நம்பிக்கை வைக்கும் சேவையாக அரச சேவையை உருவாக்குவதே இந்த அரசாங்கத்தின் இலக்காகவும் இருக்கின்றது, என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.






