எந்தவொரு நிறுவனத்தினதும் வளர்ச்சிப் பாதைக்கு, அதன் தலைமைத்துவமும் நிர்வாகத்தினரின் ஒற்றுமையுமே மிக அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர்

சமூகமாக இணைந்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் எப்படிச் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றீர்கள். அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இங்கிருந்து மாணவர்களை அனுப்பியுள்ள நீங்கள், தற்போது மருத்துவபீடத்துக்கும் மாணவர்களை அனுப்பியுள்ளமை பெருமைக்குரியதாகும். உங்களின் இந்தச் சிறப்பான முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவும், சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் கலைமகள் கலையரங்கில் கழகத் தலைவர் நீலவண்ணன் அனிஸ்ரன் தலைமையில் இன்று (14.04.2026) செவ்வாய்க்கிழமை இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையிலேயே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

எனக்கு முன்னர் உரையாற்றிய பலரும் இங்கு முன்னெடுக்கப்படும் இலவசக் கல்விச் சேவை தொடர்பிலும், இந்தக் கிராமத்தில் இயங்கும் சமூக அமைப்புக்களின் காத்திரமான செயற்பாடுகள் தொடர்பிலும் குறிப்பிட்டனர். அத்துடன், அவர்கள் எவ்வளவு ஒற்றுமையாகச் செயற்படுகின்றார்கள் என்பதையும் அறிய முடிந்தது. எந்தவொரு நிறுவனத்தினதும் வளர்ச்சிப் பாதைக்கு, அதன் தலைமைத்துவமும் நிர்வாகத்தில் உள்ளவர்களின் ஒற்றுமையுமே மிக அவசியமானதாகும். அவை இரண்டும் உங்களிடம் நிறைவாக இருப்பதனால்தான் உங்களால் இவ்வளவு தூரம் சாதிக்க முடிந்திருக்கின்றது.

ஒரு கிராமத்தின் உண்மையான அபிவிருத்திக்கு, அங்குள்ள சமூக அமைப்புக்களின் அதீத ஆர்வமும் பங்களிப்பும் அத்தியாவசியமானதாகும். அது இருந்தால்தான் அந்தக் கிராமம் அபிவிருத்தியை நோக்கித் துரிதமாகப் பயணிக்க முடியும்.

தற்போதைய சமூகப் பிறழ்வுகள் தொடர்பில் நாம் மிகவும் கவலைப்படுகின்றோம். இளம் சமூகத்தினர் தங்களது கற்றல் நேரத்துக்கு அப்பால், ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இன்று இங்கு நிறைய இளம் பிள்ளைகளைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவர்களுக்கு விளையாட்டுக்கான வாய்ப்புக்களையும் நீங்கள் இங்கு உருவாக்கிக் கொடுத்திருக்கின்றீர்கள். எனவே, இந்தப் பிள்ளைகள் சரியான தடத்தில் பயணிக்கின்றார்கள் என்பதை என்னால் உணர முடிகின்றது.

இங்கு இலவசக் கல்வியைப் பயிலும் மாணவர்கள், கல்வியில் மட்டுமன்றி விளையாட்டிலும் சாதித்திருக்கின்றார்கள். மாணவர்கள் தங்களது ஆளுமையையும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்வதற்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாகும். இந்த மன்றமும் இந்தப் பிள்ளைகளுக்கான தலைமைத்துவப் பண்புகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கல்வியோடு சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் இணைந்தால்தான் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும்.

இன்று இங்கிருந்து மருத்துவபீடத்துக்கும் மாணவர்களை அனுப்பியுள்ளீர்கள். அது மிகவும் பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் மேலும் பல மாணவர்களைப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பீடங்களுக்கும் நீங்கள் நிச்சயம் அனுப்புவீர்கள். அதற்கான எனது நல்வாழ்த்துகளையும் முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன், என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்கள் ஆகியோருக்குக் கௌரவ ஆளுநர் நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.யூட்ஸ் கருணாகரன், சங்கானை பிரதேச செயலகச் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ர.ரவிராஜ், சங்கானை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் மோ.கபிலன், சுழிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் கி.ராஜ்கண்ணா மற்றும் மூளாய் கிராம உத்தியோகத்தர் ந.சிவரூபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.