உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழா – தேராவில் பண்ணை

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழாவானது வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவிலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப் பண்ணையில் 2024.07.03 ஆம் திகதி காலை 9.30 மணியக்கு பண்ணை முகாமையாளர் தங்கராஜா – கமலதீபன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி செந்தில்குமரன் சுகந்தினி கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சசீலன் யாமினி, உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி) திரு.எஸ்.இராஜேஸ்கண்ணா, மாகாண விவசாயத் திணைக்களத்தின் கணக்காளர் திரு.ம.சிவகுமார், உதவி விவசாயப் பணிப்பாளர் திரு.ச.பாலகிருஸ்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் இந்நிகழ்வில் விவசாயத் திணைக்களத்தின் பாடவிதான உத்தியோகத்தர்கள் விவசாயப்போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் விவசாயத் திணைக்கள அலுவலர்கள் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்குட்பட்ட பண்ணைகளின் விவசாயம் தொடர்பான அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் வடமாகாண விவசாயத் திணைக்கள பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில் சிறு போகத்தில் உழுந்துச் செய்கையில் பெரும் பிரச்சினையாக காணப்படுகின்ற மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் இற்கான முகாமைத்துவம் மிக அவசியமான தேவையாக காணப்படுவதனையும் இதனை முகாமைதுவம் செய்வதன் மூலம் இந்த வைரஸ் நோய் தாக்கத்தை குறைத்து விவசாயிகள் சிறுபோகத்தில் உழுந்துச் செய்கையில் சிறந்த விளைச்சலை பெற முடியும் எனவும் ஆலோசனை வழங்கியதுடன் இன்றைய இந்த வயல் விழாவின் ஊடாக அதனை தேராவில் பண்ணையில் நேரடியான கள விஜயத்தின் மூலம் நீங்கள் அவதானிக்க கூடியதாக இருந்தது என்பதை சுட்டி காட்டியதுடன் பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகள் இருந்தும் தேராவில் பண்ணையில் இந்த வயல்விழாவினை சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தி நடாத்திய பண்ணை முகாமையாளர் மற்றும் அலுவலர்கள், அனுசரணை வழங்கிய முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் அலுவலகத்தினருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்திருந்தார்.
நிகழ்வின் போது உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி) திரு.எஸ்.இராஜேஸ்கண்ணா விவசாயிகளுக்கான ஆலோசனைகளையும் விவசாயிகளின் கேள்விகளுக்கான தொழில்நுட்ப ரீதியான பதில்களையும் வழங்கியிருந்துடன் இந்த வைரஸ் முகமைத்துவத்திற்கான முறையினை பண்ணையில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்
தேராவில் பண்ணையில் மேற்கொள்ளப்பட்ட உழுந்துச் (MIBG 4) செய்கை விதை உற்பத்தியாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. உரிய முகாமைத்துவ நடைமுறைகளை பயன்படுத்தி உழுந்து பயிர் செய்கையில் மஞ்சள் சித்திர வைரஸ் நோயை முகாமைத்துவம் செய்வதன் மூலம் விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். நடைபெற்ற வயல் விழா நிகழ்வானது களத்தரிசிப்புடன் மதியம் 11:30 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.