உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.) ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக் கொண்ட வளங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவேண்டும். அரச பணியாளர்கள் மக்களுக்கு விரைவான – அன்பான சேவையை முன்னெடுக்கின்றன ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை மதியம் (27.12.2024) இடம்பெற்றது.
உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் வடக்கு மாகாணம் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தியதாக எல்.டி.எஸ்.பி. திட்டப் பணிப்பாளர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மெச்சுரைச் சான்றிதழ்கள் ஆளுநரால் வழங்கப்பட்டன.
ஆளுநர் தனது பிரதமவிருந்தினர் உரையில், கடந்த காலங்களில் வெளிநாட்டு உதவியில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கான அனைத்து விடயங்களையும் மத்திய அரசாங்கமே – கொழும்பே கையாண்டது. எமக்கு அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அந்தத் திட்டங்கள் முழுமமையாக நடைமுறைப்படுத்தி முடிக்கப்படவில்லை. அந்த வெளிநாட்டு நிதிகள் திரும்பியிருந்தன.
ஆனால் எல்.டி.எஸ்.பி. திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி என பல சவால்களைச் சந்தித்தபோதும் சிறப்பாக செயற்படுத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது. துடிப்பான 5 உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களும், இந்தத் திட்டத்துக்காக பணியாற்றிய உள்ளூராட்சி ஆணையாளர்களான பிரணவநாதன், பற்றிக் டிறஞ்சன், திருமதி தேவனந்தினி பாபு ஆகிய மூவரும் பாராட்டுக்குரியவர்கள். இந்தத் திட்டத்துக்கான நிதியை திரும்பிச் செல்லாமல் முழுமையாக செலவு செய்ததன் மூலம் எதிர்காலத்தில் இதைப்போன்ற திட்டங்களை நாம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஜனாதிபதி அவர்கள் மாவட்டச் செயலர்களுடனான கலந்துரையாடலில் அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நிலைப்பாட்டைக் கூறியிருந்தார். அது உண்மை. எந்தவொரு திணைக்களத்துக்கும் செல்லும் பொதுமகன், அந்தத் திணைக்களத்தில் யாராவது தெரிந்த ஒருவர் இருந்தால்தான் விடயங்களைச் செய்ய முடியும் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்களை மறந்து, 2025ஆம் ஆண்டிலிருந்தாவது எமது திணைக்களங்கள் மக்களை மையப்படுத்திய சேவையை திறம்பட முன்னெடுக்க வேண்டும். மக்களுக்கான சேவை வழங்குவது ஒருபுறம் இருக்க, உங்கள் திணைக்களங்களை நாடி வருகின்ற மக்களை முதலில் மதியுங்கள். அதுவே மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவனந்தினி பாபு, வடக்கின் 5 மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், யாழ். மாநகர சபை ஆணையாளர், வடக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.