அறிமுக வயல்விழா நிகழ்வு 30.07.2025 புதன்கிழமை காலை 09.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய வளாகத்தில் திரு.வை.ஞானபாஸ்கரன், பண்ணை முகாமையாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.சண்முகராஜா சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் – மாகாண விவசாயப் பணிப்பாளர்(வடக்கு மாகாணம்), கலாநிதி S.J.அரசகேசரி -சிரேஸ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம், திருமதி.பவளேஸ்வரன் பாலகௌரி பிரதி விவசாய பணிப்பாளர்(ஆராய்ச்சி), திரு.சு.சஞ்சீவன் பிரதி விவசாயப் பணிப்பாளர் விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையம், பரந்தன் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் விதை மற்றும் ஆராய்ச்சி பிரிவு உத்தியோகத்தர்கள், பண்ணை ஒலிபரப்புச் சேவை உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
550 m2 விஸ்தீரணத்தில் உள்ளுர் கலப்பின புதிய வெண்டி வர்க்கமான GK OK Hybrid -2 இற்கான அறிமுக வயல்விழா நடைபெற்றது. இவ் வெண்டி இனமானது கிராந்துருக்கோட்டை விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. OK 45 என்ற பெண் தாய் தாவரம் மற்றும் OK 11 என்ற ஆண் தாய்த்தாவரங்களின் மூலம் GK OK Hybrid – 2 என்ற இனம் பெறப்பட்டது. முளைதிறன் 85% ஆகவும், விதையானது சாம்பல் பச்சை நிறத்தையும், காய் இளம் பச்சை நிறத்தையும் கொண்டிருந்தது. 23.05.2025 நடுகை செய்யப்பட்டு 40ம் நாள் பூத்தது. 47ம் நாளில் முதலாவது அறுவடை பெறப்பட்டது. தொடர்ந்து இதுவரை 10 அறுவடையில் 250 kg வெண்டிக்காய்கள் பெறப்பட்டது. இதில் இருந்து 30mt/ha என்ற விளைச்சல் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பயிர் நடுகை செய்யப்பட்டு இரண்டாம் வாரத்திலும் பூக்கும் காலத்திலும் களை கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் சேதனபசளைப் பிரயோகமும், அசேதனப் பசளையும் பயன்படுத்தப்பட்டது. மேலும் நோய் பீடைக்; கட்டுப்பாடாக ஒரு கிழமை இடைவெளியில் இயற்கைப் பூச்சிநாசினியாக 3G Solution, ஐந்திலைக்கரைசல் என்பன பயன்படுத்தப்பட்டன. ஒப்பீட்டளவில் ஏனைய கலப்பின வெண்டியிலும் பார்க்க சித்திர வடிவ வைரசின் தாக்கம் மிகக் குறைவாகவே காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் உள்ளுர் கலப்பின வெண்டி இனமான GK OK Hybrid–2 எமது பிரதேசத்திற்கு உகந்ததாகவும் சித்திர வடிவ வைரசின் தாக்கம் குறைவாகவும் உள்ளதன் காரணமாக இவ் அறிமுக வயல்விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இவ் உள்ளுர் கலப்பின வெண்டியை பயிரிடுவதற்கு முன்வந்துள்ளனர்.