வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைப்பாடுகள் தொடர்பில் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தலைமையிலான வடக்கு மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் நகர அபிவிருத்திக்கான மூத்த விசேட அதிகாரி போஹரம் ஷ தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர். வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்களை முன்னெடுப்பதற்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர், உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர்.
இதேவேளை வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையிலான அதிகாரிகள் துறைசார் திட்டமுன்மொழிவுகளை உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் முன்வைத்தனர். வடக்கின் பிரதான வீதிகள், பாலங்கள், எரியூட்டிகள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பிலும் அவற்றை விரைவாக முன்னெடுப்பதன் தேவைப்பாடு தொடர்பாகவும் எடுத்துரைத்துள்ளனர். மேலும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மாகாண சபையின் அமைச்சுக்கள், திணைக்களங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களாக உள்ளீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.