உலக சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு பிரதம செயலாளர் செயலக கொத்தணியினால் நல்லூர் ஆலய சூழலில் சுத்திகரிப்பு செயற்திட்டம் முன்னெடுப்பு 2023

நாடளாவிய ரீதியில் வருடா வருடம் செப்ரெம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலக சுத்திகரிப்பு தினம் (World Cleanup Day) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் ‘முறையற்ற வகையில் கடற்கரையில், ஆற்றினை அண்டிய காடுகள் மற்றும் பாதைகளுக்கு விடுவிக்கும் கழிவுகளை சுத்திகரித்தல்’ எனும் தொனிப்பொருளில் 164 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டது. இத்திட்டமானது அரச தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மத்திய சுற்றாடல் அதிகார சபையுடனும் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் வடக்கு மாகாண பிரதம செயலாளரின் தலைமையில் 16.09.2023 அன்று சனிக்கிழமை நல்லூர் ஆலய சூழலில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இச் சுத்திகரிப்பு நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப்பிரதம செயலாளர்கள், உதவிப்பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதம செயலகத்தின் கொத்தணி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு நல்லூர் ஆலய சுற்றாடலை Zero Plastic எனும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த பிரதம செயலாளர் கொத்தணி அலுவலர்களுடன் இணைந்து நல்லூர் பிரதேச சபையைச் சேர்ந்த சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களும் பங்குபற்றியிருந்தனர்.