இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடயிலான கலந்துரையாடல்

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தொடர்புடைய மாகாணத் திணைக்களங்களால் பதிலளிக்கப்பட்டதுடன், அபிவிருத்திப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு இரு தரப்பினரும் இணங்கினர்.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின்போது மாகாணத்தின் திணைக்களத் தலைவர்களுடனான சந்திப்புக்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக திணைக்களத் தலைவர்களுடனான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (06.03.2025) இடம்பெற்றது.
இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினர் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலர் – பொறியியல், எந்திரி ந.சுதாகரன் பதிலளித்தார். சில விடயங்கள் தொடர்பில் உடனடியான இணக்கம் எட்டப்பட்டது. மேலும் சில விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்பிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் மிகப்பெரியளவிலான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதனை முழுமையாக விரைந்து தரமாகச் செய்து முடிப்பதற்கு இரு தரப்பினரும் இந்தச் சந்திப்பில் இணங்கிக் கொண்டனர்.