வடக்கின் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதித் தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வடக்கிலேயே பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கை கட்டளைகள் நிறுவனம் தரச் சான்றிதழ்களை வழங்குவது தொடர்பாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கான மாகாண நிர்வாகத்தின் தேவைகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (24.12.2025) புதன்கிழமை, ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய ஆளுநர், தேசிய தர நிர்ணய அமைப்பான இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் முதன்மைப் பணியானது, வடக்கின் பிராந்திய உற்பத்திக்கும் சர்வதேச சந்தைத் தேவைகளுக்கும் இடையிலான ‘தர இடைவெளியை’ நிரப்புவதாகும். வடக்கில் உணவு பதப்படுத்துதல், கைவினைப்பொருட்கள் மற்றும் இரசாயன உற்பத்திகளில் ஈடுபடும் பல சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள், முறையான தரச்சான்றிதழ் இன்மையால் கொழும்பு அல்லது ஏற்றுமதி சந்தைகளுக்குள் நுழைய முடியாது சிரமப்படுகின்றனர். இவர்களுக்குத் தேவையான சிறந்த உற்பத்தி நடைமுறை மற்றும் எஸ்.எல்.எஸ். (SLS) தரச்சான்றுகளை வழங்குவதன் மூலம், அப்பொருட்கள் சர்வதேச சந்தைக்குள் நுழைவதற்கான ஒரு கடவுச்சீட்டை வழங்க முடியும், எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், வவுனியா பல்கலைக்கழகம் இப்பிராந்தியத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயந்திரமாகத் திகழ்வதைச் சுட்டிக்காட்டினார். இலங்கை கட்டளைகள் நிறுவனத்துடனான கூட்டிணைவு, இப்பல்கலைக்கழகத்தை ஒரு ‘பிராந்தியத் தர மையமாக’ மாற்றும். இதன் மூலம், கொழும்புக்குச் செல்லாமலேயே உள்ளூர் தொழில்முனைவோர் வவுனியாவிலேயே தரப்பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பீடங்களில் உள்ள உயர்தர உபகரணங்களைக் கொண்டு, எதிர்காலத்தில் பல்கலைக்கழக ஆய்வகங்களுக்கு ISO/IEC 17025 அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் இது வழிவகுக்கும். இதன் மூலம் உள்ளூர் நீர், மண் மற்றும் உணவுப் பரிசோதனைகளுக்குச் செல்லுபடியாகும் சான்றிதழ்களை இங்கேயே வழங்க முடியும், என்றார்.
மேலும், பல்கலைக்கழகத்தின் தொழில் அடைகாப்பு மையத்தில் (Incubation Centre) உள்ள புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், ஆரம்பம் முதலே தேசிய தரநிலைகளுக்கு அமைவாகத் தங்கள் உற்பத்திகளை வடிவமைத்துக்கொள்ளவும், வடக்கிற்கே உரித்தான பனை சார்ந்த பொருட்கள், உள்ளூர் அரிசி வகைகள் மற்றும் சேதனப் பசளைகளுக்கான புதிய தரநிலைகளை உருவாக்கவும் இந்த கூட்டு முயற்சி உதவும் எனவும் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதன்போது வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பல்கலைக்கழகத்தின் தயார்நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துத் தெளிவுபடுத்தினார். வட மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், விவசாய உற்பத்தியாளர்களுக்கு இத்திட்டம் எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்தும், வட மாகாண தொழிற்துறை திணைக்கள அதிகாரிகள், சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைவது குறித்தும் எடுத்துரைத்தனர்.
தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து முயற்சியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாகாண நிர்வாகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என ஆளுநர் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் வட மாகாண ஆளுநரின் செயலாளர், வட மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், வட மாகாண தொழிற்துறை திணைக்கள அதிகாரிகள், த மனேஜ்மன்ட் க்ளப் – யாழ்ப்பாணத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் நேரடியாகவும், வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் விதாதவள நிலைய அதிகாரி ஆகியோர் இணையவழியிலும் கலந்துகொண்டனர்.


