இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆளுநரை சந்தித்தார்

இந்த சந்திப்பின்போது ஆளுநர் என்ற ரீதியில் போருக்கு பின்னரான வடமாகாணத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்ததுடன், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்கு பாடுபடுவதாக கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தொடர்பில் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் வடமாகாண மக்களுடைய அபிவிருத்திக்கு இந்த வங்கி எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள வங்கியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், இந்த கூட்டுறவு வங்கியின் வளர்ச்சிக்கு பிரித்தானிய அரசின் உதவியினையும் எதிர்பார்த்திருப்பதாக  குறிப்பிட்டார்.
அத்துடன் வடமாகாணத்தில் பால்நிலை சமத்துவத்தை (Gender equality) பேணுவதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து வடமாகாணம் வேலைசெய்ய தயாராகவிருப்பதாகவும், வடமாகாணத்தில் அடுத்த முதலமைச்சரோ அல்லது ஆளுநரோ ஒரு பெண் தான் வரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அவர்கள் குறிப்பிடுகையில், இந்த சந்திப்பு ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்தார் . மேலும் ஆளுநரின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக அமைந்துள்ளதாக பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு