இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர், கௌரவ ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புக்களை மறுசீரமைப்பதற்கு, மாகாண சபையின் வருடாந்த வரவு – செலவுத் திட்ட நிதிக்கு மேலதிகமாக, மத்திய அரசாங்கத்தால் விசேட நிதி ஒதுக்கப்படவுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர் ஒலிவியர் பிராஸ் (Olivier Praz) தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டித்வா பேரிடரால் வடக்கில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆளுநர் விளக்கித் கூறினார். ‘பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புக்களைச் சீர்செய்வதற்கு நாம் கோரிய நிதியை விடுவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இது வழமையான மாகாண நிதி ஒதுக்கீட்டுக்குப் புறம்பான, மேலதிக ஒதுக்கீடாகும்’ என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றம் தற்போது வடக்கு மாகாணத்தில் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக ஆளுநர் கவலை வெளியிட்டார்.

‘வழமையான மழைகாலங்களை விடவும் ஏனைய மாதங்களிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகின்றது. இதனால், வடக்கு மாகாண விவசாயிகள் தமது பாரம்பரிய பயிர்ச்செய்கை நாட்காட்டியில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது’ என அவர் விளக்கினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த துணைத் தூதுவர், சுவிட்சர்லாந்திலும் காலநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளதெனவும், அதனை எதிர்கொள்ளும் வகையில் தமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்கட்டமைப்பு முதலீடுகள் குறித்தும் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டார்.

வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களுக்குத் தான் நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட துணைத் தூதுவர், கடந்த காலங்களில் சுவிட்சர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட திட்டங்களையும், டித்வா பேரிடரால் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களையும் கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளமை மற்றும் கடந்த காலங்களில் காணப்பட்ட வீதியோரப் பாதுகாப்பு முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் துணைத் தூதுவர் தனது சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், ‘உயர்பாதுகாப்பு வலயத்தினுள் நீண்டகாலமாக இருந்த வீதிகள் மக்கள் பாவனைக்குத் திறக்கப்பட்டு வருவதுடன், காணிகளும் பகுதி பகுதியாக விடுவிக்கப்படுகின்றன. எனினும், மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் அதிகமாகவே உள்ளன’ எனத் தெரிவித்தார்.

மேலும், மாகாண சபையின் அதிகார வரம்புகள், செயற்பாடுகள் மற்றும் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.