இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தலைமையில் இலங்கையில் பணியாற்றும் ஐ.நா.வின் அனைத்து முகவர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான வடக்கு மாகாண அலுவலர்களையும், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களையும் தனித் தனியாக சந்தித்து கலந்துரையாடினார்கள்.
முன்னதாக, வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண ஆளுநருடன், ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருடன், ஐ.நா.வின் அனைத்து முகவர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபலானின் வரவேற்புரையைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் உரையாற்றினார். ஐ.நா.வின் பல்வேறு அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், குறிப்பாக மீள்குடியமர்வின்போதான உதவிகளை மறக்க முடியாது எனக் குறிப்பிட்டார். அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைவதற்கு அந்த உதவிகள் பெரிதும் உறுதுணையாக இருந்ததாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும் கிராமிய அபிவிருத்தியில் இன்னும் பல மைல் தூரம் பயணிக்கவேண்டியிருப்பதைக் குறிப்பிட்ட ஆளுநர், அந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் உதவிகளைச் செய்யவேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.
போருக்கு முன்னரான வடக்கின் ஏற்றுமதி நிலைமையையும் தற்போதைய நிலைமையையும் சுட்டிக்காட்டிய ஆளுநர், விவசாயம் மற்றும் மீன்பிடியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன பிரதேச செயலர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாடாது தன்னிச்சையாக கடந்தகாலங்களில் வர்த்தமானியில் தமது ஆளுகைப் பிரதேசங்கள் என மக்களின் குடியிருப்பு மற்றும் வயல்காணிகளை வெளியிட்டமையால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை இன்னமும் தொடர்வதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
ஆளுநரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, வடக்கைச் சேர்ந்த பல தரப்பட்டவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம் எனக் குறிப்பிட்டதுடன் முன்னுரிமை அடிப்படையில் வேலைத் திட்டங்கள் அமையும் எனவும் தெரிவித்தார். கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாணப் பயணம் தொடர்பிலும் அவர் இதன்போது வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் குறிப்பாக மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும் என்ற உறுதிமொழி தொடர்பிலும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி இங்கு பிரஸ்தாபித்தார். பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்துள்ள வர்த்தக நடவடிக்கைகளால் சிவில் சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் கலந்துரையாடியதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். மக்களுக்கு வாக்குறுதியளித்த பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளமையையும் அவர் இங்கு நினைவுகூர்ந்ததுடன் இந்தப் பகுதி மக்கள் முதல் தடவையாக அரசாங்கத்துக்கு தேர்தலில் பெருமளவு ஆதரவு வழங்கியுள்ளமையும் சுட்டிக்காட்டினார். வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றத்தின் சவால்கள் தொடர்பிலும், தென்பகுதிக்கும் வடக்குக்கு இடையிலான இரட்டை இடைவெளி தொடர்பாகவும் வடக்கு மாகாண பிரதம செயலர் குறிப்பிட்டார். இளைய சமூகத்தைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விவரித்தார். வேலைவாய்ப்பின்மை, கீழுழைப்பு ஆகியன தொடர்பிலும் பிரதம செயலர் சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை இலத்திரனியல் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு யு.என்.டி.பி. நிறுவனம் ஆதரவு வழங்குவதற்கு பிரதம செயலர் நன்றிகளைத் தெரிவித்தார்.
வடக்கு மக்களின் நம்பிக்கையை தக்கவைப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது தொடர்பாகவும் ஐ.நா. முகவர் அமைப்பின் பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டனர். மேலும், வடக்கு மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இந்தச் சந்திப்பின் முடிவில் சுகாதார நகர திட்டத்துக்கு யாழ்ப்பாண நகரம் தெரிவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியால் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது யாழ். மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி மருத்துவர் ஆர்.சுரேந்திரகுமாரனும் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்களுடன் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மற்றும் ஐ.நா. முகவர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.








