இலக்கை நிர்ணயித்து செயற்பட அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும். அதைக் கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும். எந்தவொரு விடயத்திலும் கண்காணிப்பும், தொடர் நடவடிக்கையும் இருந்தால் மாத்திரமே அதில் வெற்றி சாத்தியம். அதைப் புரிந்து கொண்டு அதிகாரிகள் செயற்பட வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 19.11.2024 அன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
கூட்டத்துக்கு தலைமையேற்று ஆரம்ப உரையாற்றிய ஆளுநர், விஞ்ஞானப் பிரிவை உயர்தரத்தில் தெரிவு செய்யும் மாணவர்கள் சிலர், தமது பிரதேச பாடசாலைகளில் அந்தக் கற்கை நெறியை படிப்பிப்பதற்குரிய ஆசிரியர்கள் இல்லாமல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வேறு நகரங்களுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து படிக்கின்றனர். இவ்வாறு படிக்கும் மாணவர்களில் சிலர், கல்வியை ஒழுங்காகத் தொடராது தவறான வழியில் செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானப் பிரிவை உயர்தரத்தில் மாணவர்கள் தெரிவு செய்தால், அதைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
பாடசாலையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ, ஆசிரியர்களிடமோ எந்தவொரு கட்டணமும் அறவிடக் கூடாது. அரசாங்கத்தின் சுற்றறிக்கையும் அதைத் தெளிவாகக் குறிபிட்டுள்ளது. கட்டண அறவீடுகள் நடக்காமல் இருப்பதை கல்வி அமைச்சின் செயலர் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று ஆளுநர் பணித்தார்.
பாடசாலைகளுக்கு நேரடியாக வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் அவற்றில் பல இடங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இது ஊழல் மோசடிக்கு வழிவகுக்கின்றது. இதைக் கண்காணிப்பதற்கு இறுக்கமான பொறிமுறை உடனடியாக உருவாக்கப்படவேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
ஆசிரியர்கள் பலர் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றால் அவர்களை அதிகாரிகள் சந்திப்பதில்லை என்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவ்வாறு செயற்படக்கூடாது. அவர்களுக்கு சேவையாற்றுவதற்காகத்தான் நாங்கள் இருக்கின்றோம். எனவே ஆசிரியர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.
ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படும்போது திறமையான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வடக்கு மாகாணம் 2030 ஆம் ஆண்டு கல்வியில் முதலிடத்துக்கு வரவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து பயணிக்கவேண்டும். அதை நோக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னேறிச் செல்லவேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், கடந்த காலங்களைப்போன்று கல்வித்துறையில் இனி அரசியல் தலையீடுகள் இருக்காது என கௌரவ ஜனாதிபதி அவர்களும் உறுதியளித்திருக்கின்றார். எனவே அதிகாரிகள் துணிந்து பணியாற்ற முடியும். கடந்த காலங்களில் அதிகாரிகள் பழிவாங்கபட்ட சம்பவங்களும் இனி நடக்காது. எனவே மக்கள் நம்பும் வகையில் அரச அதிகாரிகளின் சேவைகள் இருக்கவேண்டும் என்றார் ஆளுநர்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் குறிப்பிடும்போது, வடக்கு மாகாணத்தில் 12 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைமை இருக்கின்றது. தேசிய ரீதியில் கூட 17 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைமைதான் உள்ளது. இங்கு பாடரீதியாகவே ஆசிரியப் பற்றாக்குறை இருக்கின்றது.  கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடத்திலிருந்தாலும், சாதாரண தரப் பரீட்சையில் 8ஆம் இடத்தில்தான் வடக்கு மாகாணம் உள்ளது. இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கு ஆசிரியர்களின் கற்பித்தலை கண்காணிப்பதற்கான பொறிமுறை வலுவாக இல்லை என்பதும் ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டியதுடன் அதைக் கண்காணிப்பதற்கும் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கும் உரிய பணியை ஆற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கு வடக்கு மாகாணத்தில் பாரிய வெற்றிடம் நிலவுகின்றது. எனவே அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு சிரேஷ;ட ஆசிரியர்களை ஆசிரிய வளவாளர்களை நியமிப்பதற்கு ஆளுநரின் அனுமதியைக் கோரினார். ஆளுநர் உடனடியாக அதற்கான அனுமதியை வழங்கினார்.
வெளிமாவட்டங்களில் 7 ஆண்டுகளில் பணியாற்றிய பின்னர் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பும் ஆசிரியர்கள் பலர், தமது வீட்டுக்கு அருகில் உள்ள பாடசாலையே வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். இந்த மனநிலை வளர்ந்து செல்வதாகவும், எதிர்காலத்தில் இது சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனவும் கல்வி அமைச்சின் செயலர் குறிப்பிட்டார். மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் 4,500 தொடக்கம் 6,000 ஆசிரியர்கள் ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று வருகின்றனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்கி நின்று கற்பிப்பதற்கு வசதிகள் உள்ளன. ஆனாலும் இவர்கள் இப்படிச் செல்வதால், பாடசாலை முடிந்தவுடன் அங்கிருந்து புறப்படுகின்றனர். மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பும் இல்லாமல் போகின்றது. இவை தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தின் சில பாடசாலை அதிபர்கள் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்குச் செல்லும் மாணவர்களின் தபால் அடையாள அட்டையில் மோசடி செய்து, வயது கூடியவர்களை குறைந்த வயதுடையர்களின் போட்டிக்கு அனுப்பும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக செயலர் சுட்டிக்காட்டினார். இதன்போது ஆளுநர், வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஒழுக்கம்தான் முக்கியம். அவ்வாறான அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.
அதேபோல வடக்கு மாகாண கலாசாரப் பிரிவால், பிரதேச செயலக ரீதியான கலாசார நிகழ்வுகளுக்கு வழங்கப்படும் ஒரு லட்சம் ரூபா நிதியை இரண்டரை லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கும், மாவட்ட நிகழ்வுகளுக்கு வழங்கப்படும் நிதியை 5 லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கும் ஆளுநர் அனுமதி வழங்கினார்.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.