சென்னைக்கு இரண்டுநாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இந்திய பயண முகவர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழ்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 12 நவம்பர் 2019 அன்று பிற்பகல் சென்னையில் இடம்பெற்றது.
41 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதுடன் ,சென்னைக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆர்வத்துடன் செயற்பட்டுவரும் இந்திய பயண முகவர் சங்கத்தின் பிரதிநிதிகளை வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையினை வளர்ப்பதற்கு உதவுமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
தமிழ் நாட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வருவது தொடர்பிலும் , சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார சமய இடங்களை இனங்காணுவது தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேலும், இதுதொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடமாகாணம் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பில் ஆராய்வதற்கான தூதுக்குழு ஒன்றினை வடமாகாணத்திற்கு வருமாறு ஆளுநர் அவர்கள் இதன்போது அழைப்பு விடுத்தார்.