முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக உயர் பதவிகளை, இம்மாவட்டத்தைச் சேர்ந்த இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் அலங்கரிக்க வேண்டும் எனவும், அதற்காகக் கல்வியுடன் மாத்திரமன்றி ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘பண்டாரவன்னியன் நினைவு சதுரங்க மற்றும் பேச்சுப் போட்டி – 2025’ இற்கான பரிசளிப்பு நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (22.02.2026) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவராஜா ராஜ்உமேஷ; கௌரவ விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
விருந்தினர்களை வரவேற்பதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல் மற்றும் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது ‘வீரத்தின் ஒளியில் பிறக்கும் புதிய தலைமுறை’ எனும் தொனிப்பொருளிலான சிறப்புக் காணொலித் தொகுப்பும் திரையிடப்பட்டது.
இப்போட்டிகளில், பேச்சுப்போட்டியில் (கீழ்ப் மற்றும் மேற் பிரிவுகள்) வெற்றி பெற்ற 35 மாணவர்களுக்கும், சதுரங்கப் போட்டியில் (6, 8, 10, 12, 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகள்) வெற்றி பெற்ற 117 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பணப்பரிசு, வெற்றிக்கிண்ணம், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், 4 தொடக்கம் 10 வரையான இடங்களைப் பெற்றவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியமானது, தற்போதைய ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 2011ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அவரது தூரநோக்குச் சிந்தனையில் உருவானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பல சவால்கள் மற்றும் முறைப்பாடுகளுக்கு மத்தியிலும் நன்நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அந்நிதியம், இன்றும் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதுடன், அதன் முழுமையான பங்களிப்புடனும் இப்போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர், இறுதிப்போரின் பின்னர் 2011ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியமர்ந்த நெருக்கடியான காலகட்டத்தில், பிள்ளைகளின் கல்வியைத் தொடர்வதில் மக்கள் எதிர்கொண்ட பெரும் சிரமங்களைப் போக்கும் வகையிலும், உதவ முன்வந்த புலம்பெயர் உறவுகள் மற்றும் கொடையாளர்களின் பங்களிப்புகளை முறையாக நெறிப்படுத்தும் பொறிமுறையாகவுமே இந்நிதியம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இந்நிதியத்தின் ஊடாக இதுவரை 903 மாணவர்கள் உதவிகளைப் பெற்றுள்ள நிலையில், பயனடைந்தவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும்போது அப்பணத்தை மீளச் செலுத்துவதன் ஊடாகவே நிதியத்தின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், இந்து கலாசாரத் திணைக்களப் பணிப்பாளராக இருந்த காலத்திலிருந்தே மாவட்டச் செயலர் உமாமகேஸ்வரனின் புத்தாக்கச் சிந்தனையையும் செயற்பாட்டுத் திறனையும் தான் நன்கு அறிவதாகவும், அந்நிதியத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் இத்தகைய சிறப்பான நிகழ்வை முன்னெடுத்தமைக்குப் பாராட்டுகளையும் தெரிவித்தார். அத்துடன், கௌரவ விருந்தினரான பேராசிரியர் ராஜ்உமேஷ் குறிப்பிட்டதைப்போன்று, ஆளுமையற்ற கல்வியைக் கொண்டு உயர் பதவிகளை அடைபவர்களால் சமூகத்துக்கும் நாட்டுக்கும் எவ்வித பயனுமில்லை எனச் சாடிய ஆளுநர், அத்தகையவர்கள் உயர் பதவிகளில் அமர்ந்து சுற்றறிக்கைகளைக் காரணம் காட்டி பின்தங்கிய மக்களுக்கு உதவ முன்வர மாட்டார்கள் எனவும் கவலை வெளியிட்டார்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குக் கல்வியை மாத்திரமன்றி, மற்றவர்களுக்கு உதவும் இரக்கக் குணத்தையும் போதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஆளுநர், ஆளுமையுடன் கூடிய முழுமையான கல்வியைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களே நாளை சிறந்த தலைவர்களாக மிளிர்வார்கள் எனவும், அதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.







