ஆளுநர் தலைமையில் வீதிபாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பம்

ஜனநாயகம் வளரவேண்டும் எனில் உண்மையான நீதியும் நியாயமும் இருத்தல் நன்று. நீதியும் நியாயமும் அல்லாத ஒரு சமுதாயத்தில் ஜனநாயகத்தை கேட்பது வேரில்லாத மரத்தில் கனிகேட்பது போன்றதாகும். என்று ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

வீதிபாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இன்று (07) காலை ஆளுநர் செயலகத்தில் ஆரம்பமானது . இதன்போது ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆளுநரின் செயலாளர் , அரச அதிகாரிகள் மற்றும் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் , மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் , வடமாகாண வீதிபாதுகாப்பு சபையின் பிரதானி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆளுநர் செயலக அலுவலர்கள் இணைந்து வடமாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு என்ற கருப்பொருளில் ,

“நான் வீதியில் பயணம் செய்யும்வேளையில் போக்குவரத்து விதிமுறைகளைக்கடைப்பிடித்து , செயற்பட்டு விபத்துக்களால் ஏற்படக்கூடிய இறப்பு மற்றும் காயங்களினால் ஏனையவர்களுக்கு இழைக்கப்படக்கூடிய துன்பம் இழப்பு மற்றும் அநீதிக்கெதிராகப்போராடும் என்னுடைய திடசங்கற்பத்தை பிரதிபலிப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்கின்றேன்’ என்று உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு இதன்போது இடம்பெற்றது.

அதிகரித்துவரும் வீதிபோக்குவரத்தினை கட்டுப்படுத்தும் முகமாக ஆளுநரின் வழிநடத்தலில் இந்த வீதிபாதுகாப்புவார நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது.

அத்துடன் ஆளுநர் அவர்கள் பாடசாலைமாணவர்களுடன் இணைந்து இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் பலூன் பறக்கவிடப்பட்டதுடன் வீதிபாதுகாப்பு வாரத்திற்கான தொப்பி ஆளுநர் அவர்களினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை மேலும் சிறப்பிக்கும்வகையில் வீதிகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்படவுள்ள மாதிரி பொலிஸ் உத்தியோகத்தர் உருவம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் அவர்ளினால் வீதிபொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பருத்தித்துறை பஸ்தரிப்பிடம் மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஆகிய இடங்களில் வீதிப்பாதுகாப்பு வாரம் தொடர்பிலான விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் அரசாங்க அதிபர்கள் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) காலை 9.00 மணிக்கு நடைபவனி இடம்பெறவுள்ளது.