ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஏ9 வீதியில் பயணிகள் பேரூந்துகள் மீது திடீர் சோதனை நடவடிக்கை

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏ9 வீதியில் பயணிக்கும் யாழ் – கொழும்பு மற்றும் கொழும்பு – யாழ் பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினரால் தீடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்களின் நலன்கருதி நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வேளைகளில் சுமார் 50 பேரூந்துகள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது காலாவதியாகிய வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரங்கள் இல்லாத வாகனங்கள் உள்ளிட்ட வாகன நடத்துனர்கள் மற்றும் நடத்துனருக்கான அடையாள அட்டைகள் இல்லாத வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

ஏ9 வீதியில் அதிகளவில் இடம்பெறும் விபத்துக்களை தடுக்கும் முகமாக கௌரவ ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலில் முதற்தடவை இடம்பெற்ற இந்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது 60 சதவீதமான பேரூந்துகள் சட்டத்தேவைகளை பூர்த்திசெய்யாதவையாகவும் மேலும் வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிய பேரூந்துகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டமை இணங்காணப்பட்டுள்ளன.

வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து வடமாகாணத்தில் தொடர்ந்தும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பயணிகள் தங்கள் பிரயாணத்தின்போது தாம் பயணிக்கும் பேரூந்துகள் அனுமதிப்பத்திரங்கள் கொண்டுள்ளனவா என்பது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் ஆளுநர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கையில் ஆளுநர் செயலணியும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு