ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்

ஆலங்குளம் பிரதேச மக்கள் , கிளிநொச்சி பாதுகாப்பு கட்டளை தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 20 செப்ரெம்பர் 2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் 74 ஏக்கருக்கு சொந்தமான 16 பேர் தமது சொந்த காணிகளே தேவை என்றும் , 44.5 ஏக்கர் காணியின் 30 உரிமையாளர்கள் தமக்கு மாற்றுக்காணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன்போது மாற்றுக்காணிக்கு இணக்கம் தெரிவித்தவர்கள் எதிர்வரும் புதன்கிழமை (25) துணுக்காய் பிரதேச சபையில் உள்ள உரிய அதிகாரிகளுடன் சென்று தமக்கான மாற்றுக்காணிகளை இனங்கண்டு பார்வையிடுமாறும் , தமது சொந்த காணிகளே தேவை என்பவர்கள் உரிய அனுமதி கிடைக்கப்பெற்றபின்னர்; இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) இராணுவ முகாமிற்கு சென்று அடையாளப்படுத்துமாறும் இவை ஒருவாரத்திற்குள் நடைபெறவேண்டும் என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் , வடமாகாண காணி ஆணையாளர், நில அளவையாளர் , இராணுவத்தினர், ஆலங்குள பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.