எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தூய்மையான இலங்கை என்பதன் இலக்கை அப்போதே முழுமையாக அடையமுடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமான, ‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரிமுனை கடற்கரையில் அன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் தனது தலைமை உரையில், மாவட்டத்தில் 11 இடங்களில் இந்த நிகழ்ச்சித் திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சுற்றுலாத்துறை ஊடாகவே எமது நாடு அந்நியச் செலாவணியை அதிகம் ஈட்டிக்கொள்கின்றது. சுற்றுலாவிகளைக் கவரக் கூடிய கடற்கரை வளங்கள் அதிகமாக இருந்தாலும் அந்தச் சுற்றாடல்கள் சுற்றுலாவிகளை ஈர்க்கும் வகையில் இல்லை. அதை நாம் துப்புரவாக வைத்திருக்கவேண்டும். எமது முன்னோர்கள் எம்மிடம் கையளித்த வளங்களை நாம் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு கையளிக்கவேண்டு;ம். மேற்கத்தைய நாடுகளில் எல்லா வசதிகளும் இருக்கின்றன என பலர் அங்கு செல்கின்றார்கள். அதைவிட அதிகமான வசதிகளும் வளங்களும் எங்கள் மண்ணில் இருக்கின்றன. மேற்கத்தைய நாடுகளில் உள்ளவர்கள் அங்குள் சட்டங்களை மதிப்பதைப்போன்று, சுற்றுச்சூழல்களைப் பாதுகாப்பதைப் போன்று நாம் செயற்பட்டாலே, அங்கு உள்ளதைப்போன்று இங்கும் நிலைமைகளை உருவாக்க முடியும், என்றார்.
வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில், தற்போதைய கௌரவ ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தின் தூரநோக்கில் ஒன்றுதான் தூய்மையான இலங்கை செயற்றிட்டம். எங்கள் இடங்களை நாங்கள் துப்புரவாக வைத்திருக்க பழகவேண்டும். ஏதாவது ஒன்றை நாங்கள் பழக்கப்படுத்திவிட்டால் அதிலிருந்து மாறமாட்டோம். துவறான வி;டயத்துக்கு பழகிவிட்டால், நாங்கள் முன்னர் அப்படித்தான் செய்தோம் எனச் சொல்லி அந்தத் தவறான விடயத்தை தொடர்வதற்கே விரும்புகின்றோம். மாறுகின்றோம் இல்லை. நாங்கள் மாறவேண்டும். எங்களின் மாற்றம்தான் சூழலை அழகாக்கும். எமது பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான பொதுமலசல கூடங்கள் பயன்படுத்த முடியாத நிலைமையில் இருக்கின்றன. இதற்கு நாம்தான் காரணம். ஜப்பானில் சிறு வயதிலேயே அவர்களது பாடசாலை மலசல கூடங்களை அந்தப் பிள்ளைகளைக்கொண்டே துப்புரவு செய்யப் பழக்குகின்றார்கள். அதனால்தான் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகியதும் தமது சூழலை சுத்தமாக வைத்திருக்கின்றார்கள்.
மாணவர்கள் மத்தியிலிருந்து இதை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் குப்பைத் தொட்டிக்குள் போடுவதிலிருந்து சகல விடயங்களையும் பழக்கவேண்டும். அவர்களுக்கு இத்தகைய பழக்கவழக்கங்களை பழக்குவதன் மூலம் எதிர்காலத்தில் எமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கலாம், என்றார் ஆளுநர்.
இதனைத் தொடர்ந்து கடற்கரையோரத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலர், பிரதேச சபைச் செயலர், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர், மாணவர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.