கல்வி அமைச்சின் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி, கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தின் இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய கற்றல் வளநிலையக் கட்டடத் திறப்பு விழா இன்று (23.06.2026) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி வி.செல்வானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தை மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ ஆளுநர், பாடசாலையின் வகுப்பறைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாடசாலைச் சூழலும் மிகச் சிறப்பான முறையில் பேணப்படுகின்றமைக்காகப் பாடசாலைச் சமூகத்தைப் பாராட்டினார். பாடசாலையில் பௌதீக வளங்கள் குறைவாகக் காணப்படுகின்ற போதிலும், இருக்கின்ற வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, பாடசாலையைச் சிறப்பாகவும், ஒழுங்காகவும், மிகவும் நேர் சீராகவும் நிர்வகித்து வருகின்றமை குறித்து ஆளுநர் தனது விசேட பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
நிகழ்வில் தலைமையுரையாற்றிய பாடசாலை அதிபர் திருமதி வி.செல்வானந்தன், தமது பாடசாலை எதிர்நோக்கும் தேவைகள் குறித்து ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். குறிப்பாக, பாடசாலை மாணவர்களின் நலன் கருதி அவசியமான பிரதான மண்டபம் மற்றும் பாடசாலைக்கான சுற்றுமதில் என்பவற்றை அமைத்துத் தருமாறு அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
இந்தத் திறப்பு விழா நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பிரதீபா காயத்திரி கஜபதி, கரைச்சி கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.தர்மரத்தினம், தூய்மை இலங்கைச் செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மருதன் மோகன் மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





