அரச துறையில் பொதுமக்கள் சேவையை செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் வினைத்திறனுடன் வழங்குவது தொடர்பான பயிற்சிப் பட்டறை

ஜனாதிபதி செயலகமானது டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழிநுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் “AI for Transforming Public Service” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறைகளை நடாத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, வடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பட்டறையானது 27.10.2025 அன்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வின் வரவேற்புரையினை வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்கள் ஆற்றினார். அடுத்து டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான கெளரவ ஜனாதிபதி அவர்களின் பிரதம ஆலோசகரான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய அவர்கள் இப் பயிற்சிப் பட்டறையின் நோக்கம் தொடர்பில் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகை தந்த வளவாளர்களால் பயிற்சி பட்டறை அமர்வானது நடாத்தப்பட்டதுடன் நிகழ்வின் இறுதியாக நன்றியுரையினை கெளரவ ஜனாதிபதி அவர்களின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. சமீர விக்கிரமசிங்க அவர்கள் வழங்கினார்.
இப் பயிற்சியானது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரைவாகவும், செயற்திறனுடனும் திறம்படவும் ஆற்றுவதற்காக அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை விருத்தி செய்து அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.
இப் பயிற்சிப் பட்டறையில் அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெற்றமை விசேட அம்சமாகும்.