அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள்.

சுமார் ஒருமாத காலமாக பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு நோற்ற இஸ்லாமிய சகோதரர்கள், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டதும், ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒரு கடமையாகும். இந்தக் காலப்பகுதியில் வெறுமனே பசித்திருந்து, தாகித்திருப்பது மாத்திரமின்றி, இறையச்சத்தை தன்னகத்தே ஏற்படுத்திக் கொள்வதே நோன்பின் முக்கிய கடற்பாடாகும்.

புனித நோன்பு காலப்பகுதியில் ஏழைகளுக்கு உதவுதல், கூட்டு சமரசம், நல்லிணக்கத்தை பேணுதல், அமைதியை கடைபிடித்தல், சமூக விழுமியங்களை தானும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் பழக்குதல் உள்ளிட்ட பல நற்காரியங்களில் இஸ்லாமிய மக்கள் ஈடுபடுகின்றனர்.

அந்தவகையில், இனங்களிடையே பரஸ்பர நல்லிணக்கம் மேம்பட்டு, மனிதாபிமான செயற்பாடுகள் மேலும் முன்னெடுக்கப்பட நோன்பு காலப்பகுதியில் மாத்திரமின்றி அனைத்து சந்தர்பங்களிலும் அனைவரும் செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. வளமான இலங்கையை கட்டியெழுப்பி, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து வருவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகிறது.

இவ்வாறான மத நிகழ்வுகளின் போது ஏற்படுகின்ற நல்லிணக்கம், சமத்துவம், சமரச மனப்பாங்கு உள்ளிட்ட அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளும், எந்நேரமும் எம்மத்தியில் காணப்பட இறையாசியை வேண்டி, ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

“ஈத் முபாரக்”

 

திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

கௌரவ ஆளுநர்,

வடக்கு மாகாணம்