அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (31.10.2025) நடைபெற்றது.

இது தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன், மேற்படி பிரதேசங்களுக்கு நேரடியாக களப் பயணம் மேற்கொண்டு தனது அவதானிப்புக்களை சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைவாக எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்படுத்தும் முகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆதரவுடன் அந்த மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ஆகியோர் பங்கேற்றனர்.