இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை அமுல்படுத்தி வருகிறது குறிப்பாக வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து இந்நோய் பரவுகின்ற தன்மை அவதானிக்கபட்டிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது.
வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுபடுத்தும் நோக்கில் தேசிய கொள்கைக்கு அமைவாக சில நடைமுறைகளை உரியமுறையில் நடைமுறைப்படுத்தும் படி வடமாகாண ஆளுநர் சகல தரப்பினருக்கும் பணித்துள்ளார்.
சுற்றுலா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இவ்வருடம் பெப்ரவரியில் இருந்து வருகை தந்த, வருகை தருகின்ற பயணிகள் தொடர்பாக விபரங்களை கிராம சேவகர்கள் ஊடாக பெற்றுகொள்ளும் நடைமுறையை விரைவாக மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர்களூடாக இவற்றை உரிய முறையில் நடைமுறை படுத்தும் படியும் வடமாகாண அரச அதிபர்களுக்கு வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் பணித்துள்ளார்.
இவ் ஒழுங்குமுறை தொடர்பில் யாரும் வீணாக குழப்பமடைய தேவையில்லை என்றும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து வடக்கு மாகாண மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தின் தேசிய திட்டமிடல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறையே இதுவென்றும், அனைத்து தரப்பினருக்கும் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் வடமாகாண ஆளுநர் பொதுமக்களை கேட்டுகொண்டுள்ளார்.