“அடிமட்ட அமைப்புகள் சிறப்பாக இயங்கும் போது கிராமத்தின் வளர்ச்சியில் நாம் காத்திரமான வேறுபாட்டைக் காண முடியும் – கௌரவ ஆளுநர்

ஒரு கிராமத்தின் உண்மையான வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பன, அக்கிராமத்தில் இயங்கும் அடிமட்ட அமைப்புகளின் சிறப்பான செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இளவாலை ‘எழுச்சியகம்’ மக்கள் வலுவூட்டல் மையத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

“அடிமட்ட அமைப்புகள் எவ்வளவு சிறப்பாக இயங்குகின்றனவோ, அப்போதே அக்கிராமத்தின் வளர்ச்சியில் நாம் காத்திரமான வேறுபாட்டைக் காண முடியும். அந்த வகையில், அவ்வமைப்புகளுக்குத் தலைமை தாங்குபவர்களின் சிறப்பான வழிகாட்டல் இங்கு மிகவும் அவசியமானதாகும். சமூகப் பிறழ்வுகள் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், அவற்றைத் தடுத்து இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘எழுச்சியகம்’ அமைப்பு இன்று பல படிகளைக் கடந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றமை மிகவும் பாராட்டத்தக்கது.

இந்த அமைப்பு வெறுமனே ஒரு தளத்தில் மாத்திரம் இயங்காது, ஆன்மீகம், சமூக மேம்பாடு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இளம் சிறார்களை வலுவூட்டும் செயற்றிட்டங்கள் எனப் பல தளங்களில் இயங்கி வருகின்றது. முக்கியமாக, மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தி, அவர்களைக் கலை மற்றும் சமூகத்துடன் இணைக்கும் அரிய சேவையை இந்த அமைப்பு அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றது.

அடிமட்ட அமைப்புகள் சிறப்பாக இயங்கும் போது, சமூகத்தின் மீது அக்கறையும் மற்றவர்கள் மீது இரக்கமும் கொண்ட சேவை மனப்பான்மையுடைய இளைய தலைமுறை உருவாகும். இன்று நாம் வெவ்வேறு சவால்களுக்கும் புரட்சிகரமான சூழல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான சூழல்களில் சமூகப் பிறழ்வுகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாத்து, அவர்களின் ஆளுமையை விருத்தி செய்து, பல் பரிமாணங்கள் கொண்ட ஆற்றல்மிகு சமூகமாக அவர்களை உருவாக்குவதில் இவ்வாறான அமைப்புகளே பெரும் அரணாகத் திகழ்கின்றன.

இந்த அமைப்பைத் தூரநோக்குடன் ஆரம்பித்து, வெளிநாட்டில் இருந்தவாறு அதற்கான பாரிய பொறுப்பை ஏற்றுள்ள ஜெயரட்ணம் கொர்னேலியுஸ் அவர்கள் எத்தகைய நன்நோக்கத்திற்காக இதனை உருவாக்கினாரோ, அந்த இலக்கு இன்று வெற்றிகரமாக அடையப்பட்டு வருகின்றது. அயல் கிராமத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில், ‘எழுச்சியகம்’ அமைப்பின் இந்தத் தொடர்ச்சியான வளர்ச்சியை நான் பெருமையுடன் பாராட்டுகின்றேன்.

இந்த அமைப்பு ஏனைய கிராமங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் தொடர்ந்தும் செயலாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் எழுச்சியகத்தின் காப்பாளர் வணக்கத்துக்குரிய அருட்பணி.அ.வி.சில்வெஸ்ரர்தாஸ், இளவாலை மறைக்கோட்ட முதல்வர் வணக்கத்துக்குரிய அருட்பணி.ஜே.எ.யேசுதாஸ், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.யெசீதன், எழுச்சியகத்தின் பொதுச் செயலாளர் தே.லக்ஸ்மன், நிகழ்வின் தலைவர் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.