வலி. கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட அக்கரை கடற்கரை மற்றும் வலி. வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட காங்கேசன்துறை கடற்கரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (24.09.2026) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, வலி. கிழக்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட புத்தூர் 9ஆம் கட்டை வீதி தொடர்பில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆளுநர் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு வீதியை உரிய தரத்தில் புனரமைக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அந்திராணை வீதி புனரமைப்புப் பணிகளையும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் கேட்டறிந்தார்.
பின்னர், வலி. கிழக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற ஆளுநர், அங்கு இடம்பெற்று வரும் செயற்பாடுகளைப் பார்வையிட்டார்.
இதனையடுத்து அக்கரை கடற்கரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளையும் ஆளுநர் பார்வையிட்டார். அக்கரை கடற்கரை எதிர்காலத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான பல்வேறு இயற்கை வளங்களையும் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அதனை அடிப்படையாகக் கொண்டு படிப்படியாக அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து முன்வைக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை கடற்கரைக்கும் சென்ற ஆளுநர், அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டார். அத்துடன், கடலரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களையும் நேரில் பார்வையிட்டார். இச்சேதங்களை எதிர்காலத்தில் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளீர்க்குமாறு ஆளுநர் பணித்தார்.
இக்களப்பயணத்தின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




