வேதாள வெங்காய உண்மை விதையுற்பத்தி வயல் விழா

வேதாள வெங்காய உண்மை விதையுற்பத்தி வயல் விழா 31.03.2021 அன்று சண்டிலிப்பாய் விவசாய போதனாசிரியர் பரிவில் பிரான்பற்று கிராமத்தில் நடைபெற்றது. இவ் வயல் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகண விவசாய பணிப்பாளர் திரு. சி. சிவகுமார், சிறப்பு விருந்தினராக பொறுப்பதிகாரி ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி திருமதி. பா.பாலகௌரி, யாழ். மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி அ. ஸ்ரீரங்கன், உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி) திரு.எஸ். ராஜேஷ்கண்ணா, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வை.குலோத்துங்கன், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களும் மற்றும் விவசாயிகளும் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இவ் வயல் விழாவானது விவசாயி, திரு.மா. சற்குணசிங்கம் அவர்களது வயலில் ஸ்தாபிக்கப்பட்ட MICLO – 1 வர்க்க வேதாள வெங்காய உண்மை விதையுற்பத்தி துண்டத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக இயந்திர மூலமான வெங்காய உண்மை விதைப் பிரித்தெடுப்பு செயல்முறையுடன் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் உண்மை விதை விதையுற்பத்தியில் கடைப்பிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களான வசந்தகால நிலைப்படுத்தல், விதைப்பரிகரிப்பு, நடுகை இடைவெளி, நடுகை முறை, நீர் முகாமைத்துவம், கையால் மகரந்த செயற்கையை மேற்கொள்ளும் முறை மற்றும் நோய் பீடை முகாமைத்துவம் போன்ற விடயங்கள் சண்டிலிப்பாய் விவசாய போதனாசிரியரால் விளக்கமளிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. அ. ஸ்ரீரங்கன் அவர்களின் உரையாற்றலின் போது விவசாயிகளின் உற்பத்தி செலவினத்தை குறைத்து வருமானத்தையும் இலாபத்தையும் ஈட்டும் வழிமுறைகளை கடைப்பிடிப்பதோடு 2021 ஆம் ஆண்டிற்காண மத்திய விவசாய அமைச்சின் நிதியனுசரனையுடன் மாகாண விவசாய திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் பற்றிய விளக்கம் விவசாயிகளிற்கு வழங்கப்பட்டது.

ஆராய்ச்சி பிரிவில் வெங்காய விதை விதையுற்பத்தியில் கடைப்பிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான விளக்கம் பொறுப்பதிகாரி ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி திருமதி. பா.பாலகௌரி அவர்களால் வழங்கப்பட்டது.

இவ் விழாவில் வடமாகண விவசாய பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் வெங்காய செய்கையில் உற்பத்தி செலவினத்தை குறைக்க உண்மை விதையை பயன்படுத்த வேண்டுமெனவும் அதனூடாக நுகர்வோர் நியாயமான விலையில் வெங்காயத்தை கொள்வனவு செய்வதுடன் விவசாயிகள் கூடிய வருமானத்தை பெற்றுத்கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் எதிர் வரும் காலங்களில் அமைக்கப்படவுள்ள களஞ்சியங்களில் விவசாயிகள் தமது உற்பத்திப்பொருட்களை களஞ்சியப்படுத்தி சந்தைப்படுத்தலாம் எனவும் கூறினார்.
கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கருத்து தெரிவிக்கையில் இரசாயன பயன்பாட்டை குறைத்து சூழலுக்கு நேயமான முறையில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டுமென கூறினார். HNB வங்கி பிரதிநிதி விவசாயிகளிற்கு குறைந்த வட்டி வீத கடன் வசதிகள் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.