விவசாயிகள் பயிற்சி நிலைய வயல் விழா – மல்லாவி

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவியில் அமைந்துள்ள விவசாயிகள் பயிற்சி நிலையத்தில் பேண்தகு விவசாயம் எனும் தொனிப்பொருளில் வயல் விழாவானது 06.03.2021 சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், சிறப்பு விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் திருமதி.ஆ.லதுமீரா, துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் திரு.எ.அமுதலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.பு.சிவபாலன், சித்த ஆயள்வேத வைத்தியர் திருமதி எஸ்.சிவராஜன், மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கே.கே.ஜே.துசார, துணுக்காய் மாந்தை கிழக்கு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் திரு.செ.அரவிந்தன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வயல் விழாவின் போது அம்மாச்சி பாரம்பரிய உணவு உற்பத்தியாளர்களினால் பலாப்பழம் சேர்க்கப்பட்ட சிற்றுண்டியானது அறிமுகப்படுத்தப்பட்டது. நீர்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக சுரக்காய் பந்தல் பயிர்ச்செய்கை மூலம் படர விடப்பட்டிருந்ததுடன் பொதி முறைப்பயிர்ச்செய்கையில் மரக்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மற்றும் விதை தொற்று நீக்கம், விதைப்பரிகரணம், Bio Gold அஸ்பரில்லாப் பாவணை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

நெற்பயிர்களுக்கு அசோலா பாவணை தொடர்பாகவும் எதிர்வரும் போகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்ப விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் கால்நடை தீவனமாக பாவித்தல் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. மற்றும் இலகுவாக கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு காளான் கொட்டில்(கட்டமைப்பு) அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் மரத்தூள்(றபர்), வைக்கோலைப் பயன்படுத்தி காளான் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் வயல் நிலங்களில் அறுவடை முடிவடைந்த பின்னர் காணப்படுகின்ற ஈரத்துடன் இங்கு வெளிப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மறு வயற் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாகவும், வயல் நிலங்கள் வேலிகளுடன் காணப்படுவதனால் இப் பயிர் செய்கையினை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இவ் வயல் விழாவின் போது சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றும் இரண்டு விவசாயிகளிற்கு SL-GAP, A தர சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.