விதையுற்பத்திக்கான ‘லங்கா ஜம்போ’ நிலக்கடலை அறுவடை விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் உலகவங்கியின் நிதி அனுசரணையில் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் நிலக்கடலை உற்பத்தியினை ஊக்குவிப்பதுடன் விவசாயிகளின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காகவும் திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு ½ ஏக்கர் விஸ்தீரணத்துக்கான 20kg ஜம்போ நிலக்கடலை விதையும் 25kg ஜிப்சமும், மின்சார நீர் இறைக்கும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டு தற்போது நிலக்கடலை விதைகள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய விவசாய திணைக்களத்தின் விதை அத்தாட்சிப்படுத்தற் சேவைப் பிரிவினரால் பயிர்ச்செய்கைக் காலப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளும் கள விஜயமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

‘லங்கா ஜம்போ வர்க்க நிலக்கடலை விதையுற்பத்தித் திட்டத்தின் அறுவடை விழா’ நிகழ்வானது 25/07/2020 ஆம் திகதி காலை திருவையாறு கிராமத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

லங்கா ஜம்போ நிலக்கடலைச் செய்கையினை மேலும் அதிகரிப்பதற்கேதுவாக இரணைமடு நீர்ப்பாசனக்குளத்தின் திருவையாறு ஏற்றுநீர்ப்பாசன மேட்டு நிலங்களிலும், கனகாம்பிகைக்குள புவியீர்ப்பு நீர்ப்பாசனத்தின் கீழும் விதை உற்பத்திக்கான மற்றும் வர்த்தகரீதியிலான ‘லங்காஜம்போ’ நிலக்கடலை உற்பத்தி செய்யப்படவுள்ளது. மேலும் முத்தரப்பு ஒப்பந்த அடிப்படையில் ஸ்கான்மக்கி (SCAN Maggie) நிறுவனம் கொள்வனவு செய்ய முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதது.

வடமாகாணத்தில் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற ‘லங்காஜம்போ’ நிலக்கடலை உற்பத்தி செய்கையானது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் மட்டுமன்றி இச்செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வத்தினை தூண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்

வெற்றிகரமாக இடம்பெற்ற அறுவடை விழாவில் பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ‘புரட்சிகரமான இம்மாற்றம் விவசாயிகளின் வருமானத்தினை அதிகரிக்கும்’ எனத் தான் நம்புவதாக கூறினார். சிறப்பு அதிதியாக விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் மாகாண பிரதி திட்ட பணிப்பாளர் க.பத்மநாதன் அவர்களும் பங்குபற்றியிருந்தார். இவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட விதை அத்தாட்சிப்படுத்தும் சேவைகள் உத்தியோகத்தர், கிராமஅலுவலர், மாவட்ட விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.