வருமானவரி பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கபட்ட 25 வருமான பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று காலை 1௦.3௦ மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், மற்றும் நியமனம் பெற்ற வருமான பரிசோதகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு நியமனங்களை வழங்கிவைத்து கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதற்கிணங்க உங்கள் புவியியல் பிரதேச மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்தவகையில் உள்ளுராட்சி திணைக்களங்களின் அடிப்படை வரவுசெலவுத்திட்ட வருமானத்தை ஈட்டிகொடுக்கும் முக்கிய பணியை மேற்கொள்ளபோகும் நீங்கள் அனைவரும், அரச வருமானத்தை துஸ்பிரயோகம் செய்யாது நிறுவன ஒழுக்கக் கோவைக்கு அமைய நேர்மையுடன் கடமைகளை ஆற்றவேண்டுமென தெரிவித்தார்.

மேலும், சேகரிக்கும் வருமானங்களை உரியவாறு அரச கணக்கில் வைப்பிலிட்டு, அரச ஆவணங்களை அரச சட்டக்கோவைக்கு அமைய கையாள வேண்டுமென வலியுறுத்தினார். அத்துடன் நியமனம் பெற்ற அனைவருக்கும் மற்றும் நியமனங்களை வழங்க முன்நின்று செயற்பட்ட அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.