எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து (01.05.2025) அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தற்காலிக அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடமுடியாது என்றும், அவ்வாறு சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், எனவே அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவையில் பயணிப்பவர்கள் இவ்விடயம் தொடர்பில் கருத்திற்கொள்வதன் மூலம் தமக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
வடமாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் வடமாகாண வீதிப்யணிகள் போக்குவரத்து அதிகாரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலுவலர்களுக்கான விசேட போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பேருந்துகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான படிமுறைகள் தொடர்பான பத்திரத்துக்கு 3ஃ3ஃ2025 அன்று வடமாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நடைமுறைகள் 2016ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நியதிச்சட்டத்தின் பாகம் III இன் பிரிவு II, பிரிவு 44 மற்றும் 2016ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வடக்கு மாகாண வீதிப்யணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவையில் ஏற்கனவே ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அனைத்து பேருந்துகளும் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவைக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.
அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவைக்குரிய தற்காலிக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பபடிவங்களை வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்வதற்கு 30.4.2025 வரை கால அவகாசம் வழங்கப்படுகின்றது.
01.05.2025 இற்கு பின்னர் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் யாவும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்காலிக அனுமதிப்பத்திரமின்றி சேவையாற்றும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவையில் பயணிப்பவர்களும் இவ்விடயம் தொடர்பில் கருத்திற்கொள்வதன் மூலம் தமக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளமுடியும், என்று ஊடக அறிக்கையில் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.