வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் ‘விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம்

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம் என்பன 25 பெப்பிரவரி 2021 அன்று காலை 9 மணிக்கு ஜெட்விங் விருந்தினர் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் 5 மாவட்ட அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் பெப்ரவரி 2௦2௦ முதல் சுற்றுலாத்துறை, கொவிட்-19 தொற்று காரணமாக பல சிரமங்களை எதிர்கொள்ள தொடங்கியது எனவும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாத்துறை சார் ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் நாடு முழுவதும் துரதிஸ்டவசமான சூழ்நிலையை எதிர்கொண்டார்கள் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் இத்தொற்றின் சவால்கள் இருந்தபோதிலும் கடந்த ஆண்டு செப்தெம்பர் மாதம் “எபெக்ஸ்“ திட்டத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தனது சொந்த துறையை மீண்டும் கட்டியெழுப்புவதைக்கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

அத்துடன் வடமாகாணத்தில் உள்ள 15௦ ற்கு மேற்பட்ட சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கொவிட்-19 தொற்று வழிகாட்டுதலுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்காக வடமாகாண சுற்றுலாத்துறை முழுவதுமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் சுற்றுலாத்துறை சார் ஆவணங்களை வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக திறன்பட உருவாக்கி இங்கு வெளியிட்டமைக்காக “எபெக்ஸ்“ குழுவிற்கும் வடமாகாண சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்ததுடன் இங்கு சுற்றுலா வழிகாட்டிகளாக நியமனம் பெறும் ஒவ்வொருவரும் இத் துறையில் உங்களை சரியாக நிலைநிறுத்திக் கொண்டு நாட்டினுடைய மற்றும் வடமாகாணத்தினுடைய எதிர்கால சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக பணியாற்ற வேண்டுமென வாழ்த்துகளையும் தெரிவித்தார்.