வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும்

கமத்தொழில் ராஜாங்க அமைச்சர் மாண்புமிகு சஷீந்திர ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் வடமாகாண கல்வி அமைச்சு, வடமாகாண கல்வித்திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் ஆகியன இணைந்து நடத்தும் வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் மற்றும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும் கிளி/வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலையில் 15 பெப்பிரவரி 2021 அன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், இன்று முக்கியமாக இரண்டு விடயங்களை நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக முதலிடுகின்றோம், ஒன்று சிறுவர், மற்றையது பழமரக்கன்றுகள் என குறிப்பிட்டார்.

மேலும், இயற்கையை பாதுகாப்பதன் மூலம் ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனும் எண்ணக்கருவை சிறுவர்கள் மத்தியில் விதைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இத்திட்டம் கௌரவ அமைச்சரினால் நடாத்தப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் அவருடைய திட்டத்திற்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மேலும், கொவிட்-19 இனால் உலகத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாலும் அதனால் ஏற்பட்ட ஒரு சிறு நன்மையாக சூழல் மாசடையும் வீதம் குறைவடைந்துள்ளதை சுட்டிக்காட்டினர், அத்துடன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை நாட்டி சூழல் மாசடைவதை மேலும் குறைக்க வேண்டும் எனவும் அளிக்கப்படும் மரக்கன்றுகளின் எண்ணிக்கைக்கு சம அளவில் மரங்களை நட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இச்சிறுவர்களை இயற்கையை பேணுபவர்களாக அதன் முக்கியத்துவத்தை உணர்த்துபவர்களாக உருவாக்க வேண்டுமெனவும், பாடசாலையினுடைய முன்னைய வளர்ச்சிக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு மென்மேலும் வளர வேண்டுமென வாழ்த்துகளை தெரிவித்தார்.