வடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால், வடக்கு மாகாணத்தின் விவசாயிகள், பண்ணையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த அக்கறையுடைய தரப்பினர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை, தீர்வு செய்வதற்கான செயற்றிட்டம் ஒன்று பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயலமர்வு, முதற்கட்டமாக எதிர்வரும் 27.01.2021 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு மன்னார் மாவட்ட, நானாட்டான் பிரதேச செயலத்திலும், பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திலும், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேற்படி செயலமர்வில் வடமாகாண விவசாய அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், குறித்த பிரதேச செயலக பிரிவினை பிரதிநிதித்துவம் செய்யும் பிராந்திய, பிரிவு அலுவலகங்களின் துறைத் தலைவர்கள், கள அலுவலர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் பயனாளிகளது நியாயமான தேவைகளை அடையாளங் காண்பதுடன் அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளையும் எடுத்துக்கூறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விவசாய மற்றும் பண்ணையளார்கள் தமது தேவைகள், எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக வடமாகாண கௌரவ ஆளுநர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் எழுத்து மூலமாகவும் வாய்மொழிமூலமாகவும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அவர்களது தேவைகள், அவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளை நேரடியாக கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான செயற்றிட்டமாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் கொவிட் – 19 தொற்றுக் காரணமாக இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளநாட்டு விவசாய மற்றும் பண்ணை உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பாக அரசு அக்கறைகொண்டுள்ளது. எனவே விவசாயிகள், பண்ணையாளர்கள், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதன் மூலமே அவர்களது உற்பத்தி இயலளவை அதிகரிக்க முடியும் என்பதுடன், அவர்களது வாழ்வதார முன்னேற்றத்தினையும் உறுதிசெய்து கொள்ள முடியும்.

மேற்படி செயற்றிட்டம் தொடர்ச்சியாக வடமாகாணத்தின் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக விவசாயத் துறைசார்ந்த சேவை பெறுநர்கள் எதிர்நோக்கும் பெரும்பாலான சிரமங்களுக்கு தீர்வுகள் எட்டப்படுவதற்கான வழி வகையாக இது அமையும். மேலும் சேவை பெறுநர்களது திருப்தி, எதிர்பார்ப்பு மற்றும் சிபார்சுகளின்; அடிப்படையில் இச்செயற்றிட்டமானது தொடர்ச்சியாகவும் மெருகூட்டப்பட்ட வகையிலும் வடமாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Best New Online Casinos in the USA (Updated for 2023)