வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு! மாகாண அபிவிருத்திசார் விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வு

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது.

27-09-2023 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய வவுனியா பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் மோகனதாஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒழுங்குபடுத்தப்பட்ட இந்தச் சந்திப்பில், மும்மத பிரதிநிதிகள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இளைப்பாறிய அதிபர்கள், முன்னாள் நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள், கைத்தொழில் மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகள், விவசாய மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண குடாநாடு தற்போது எதிர்நோக்கும் இளையோர் கல்வி மற்றும் ஒழுக்கம்சார் பிரச்சினைகள், கல்வித்துறைசார் சவால்கள், மாணவர்கள், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், விவசாயத்துறை முன்னேற்றத்துக்கு அவசியமான விடயங்கள், காணிப் பிரச்சினைகள், மாகாண நிர்வாகம்சார் விடயங்கள், வர்த்தகம் கைத்தொழில்துறைசார் சவால்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

தற்போது சமூகத்தில் புதிதாக ஏற்பட்டுவரும் மதம்சார் முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தி, அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஆரோக்கியமான சூழ்நிலை வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவேண்டும் என்று மதப் பிரதிநிகள் சார்பில் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு அவசியமான பௌதீக வளங்கள், ஆசிரிய வள மேம்பாடு, தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுவரும் பாதிப்புக்கள் குறித்தும், பாடசாலை இடைவிலகிய, மற்றும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரத்தில் சித்தியடைந்தும் உயர்தரத்துக்குத் தேறாத மாணவர்களுக்கான தொழிற்கல்வி வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூக சேவைகள் மற்றும் கூட்டுறவுத் திணைக்களின் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரித்து, சனசமூகநிலையங்கள், கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், உள்ளூர் அமைப்புக்களை வலுப்படுத்துவதன் ஊடாக கிராம மட்டத்திலிருந்து அபிவிருத்திப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வடக்கில் காணிகள் அற்றோராக நீண்ட காலமாக வாழ்ந்துவரும் சமூகப் பிரிவினருக்கு காணிகள் கிடைக்கச்செய்து அவர்களது குடும்பங்கள் எதிர்நோக்கும் நெருக்கடியான வாழ்நிலைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படக்கூடியதாக இருந்தும் கைவிடப்பட்டுள்ள நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்காக காணிகளற்ற குடும்பங்களுக்குப் பகிர்ந்தளித்து அவர்களது வாழ்வாதாரத்தையும், மாவட்டத்தில் உணவுத் தேவையையும் நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

கைத்தொழில் முயற்சிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளைப் பதிவுசெய்வதில் ஏற்பட்டுவரும் தாமதங்கள், முட்டுக்கட்டைகளை நீக்கி, வர்த்தக – தொழிற்றுறைச் செயற்பாடுகளை இலகுபடுத்தவேண்டும் என்றும், யாழ்ப்பாண நகரின் வர்த்தக நடவடிக்கைகள் இரவு நேரத்திலும் தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை இரவு 9 மணிவரையில் நீட்டித்து நடாத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சிவில் சமூக பிரதிநிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட இவ்வாறான பல்வேறு விடயங்களையும் கவனமாகச் செவிமடுத்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாகாண நிர்வாக எல்லைகளுக்கு உட்பட்டுத் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேல் மாகாணம் உட்பட, இலங்கையின் ஏனைய பல மாகாணங்களிலும் மத்தியிலிருந்து மாகாணத்துக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நியதிச்சட்டங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டிருப்பதால், அந்த மாகாணங்களில் பல்வேறு விடயங்களையும் ஆளுநர்களால் இலகுவாக நிறைவேற்றக்கூடியதாக இருப்பதாக இங்கு சுட்டிக்காட்டிய ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள், வடக்கு மாகாணத்தில் அவ்வாறன்றி, நிறைவேற்றப்படவேண்டிய பல நியதிச்சட்டங்களும் நிறைவேற்றப்படாதிருப்பதாலேயே மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய பல்வேறு விடயங்களை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனினும், முடிந்தளவு வடக்கு மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தேவையானபோது மத்திய அரசாங்கத்துடன் பேசி வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இங்கு விளக்கிய வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடக்கு மாகாணம் சார்பில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக விசேட அமைச்சரவைப் பத்திரங்களைச் சமர்ப்பித்து முக்கியமான பல விடயங்களுக்குத் தீர்வுகண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கு கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களுக்குத் தீர்வுகாண்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்வதாகவும், இவற்றின் முன்னேற்றம் குறித்து ஆராய இதுபோன்று எதிர்காலத்தில் கிரமமான சந்திப்புக்களை நடாத்த ஏற்பாடு செய்வதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தம்மைச் சந்தித்த சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார்.

இதேபோன்று, யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்னும் பலரையும் இதற்குள் உள்வாங்கி ஒருங்கிணைத்துச் செயற்பட தான் தயாராக இருப்பதாகவும், மேலும் வடக்கு மாகாணம் தழுவிய அளவில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களை நடாத்தி, அந்தந்த மாவட்டங்களின் மக்கள் பிரச்சினைகளையும் அவர்கள் மூலம் அறிந்துகொண்டு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இங்கு தெரிவித்தார்.

இறுதியாக, இந்தச் சந்திப்புக்கான சந்தர்ப்பத்தை வழங்கி நேரம் ஒதுக்கி நீண்டநேரம் கலந்துரையாடியமைக்காக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு கூட்டாக நன்றி தெரிவித்த சிவில் சமூகப் பிரதிநிதிகள், வடக்கு அபிவிருத்திக்காக அவர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு நல்குவதாகவும் உறுதியளித்தனர்.