யா/கெற்பேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறை கட்டடத்தொகுதி திறப்புவிழா

2019 ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட  யா/கெற்பேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறை கட்டடத்தொகுதியின் திறப்புவிழா நிகழ்வு 26.01.2021 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் சுபமுகூர்த்த நேரத்தில் வகுப்பறை கட்டட தொகுதியை திறந்து வைத்தார்.

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் யுத்தத்தினால் பல்வேறு இன்னல்களை சந்தித்ததுடன் பலரையும் ஆதரித்த பிரதேசமாக காணப்படும் இப்பிரதேசத்தின் மக்களது பிரச்சனைகள் மனிதாபிமானத்துடன் நோக்கப்பட வேண்டுமென தெரிவித்தார். அந்தவகையிலே இவ்வகுப்பறை தொகுதிக்கட்டடம் சிறப்பான வகையில் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் தேவைகள் சரியாக இனங்காணப்பட்டு,  இவ் இளைய சமுதாயம் சிறப்பாக சரியான நெறிமுறைகளூடாக வளர்த்தெடுக்கப்பட பெற்றோர்களின் சிறந்த வழிகாட்டல் மிக முக்கியமானதொன்றாகும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து மாணவர்களின் எதிர்கால உயரிய கனவுகளை கேட்டு மனமகிழ்ச்சியை வெளிபடுத்திய கௌரவ ஆளுநர் அவர்கள் பாடசாலைக்கு மாணவர்கள் வருகைதரலின் அவசியம் மற்றும் எதிர்காலத்தில் திறமையான மாணவர்களாக தேர்ச்சி பெற்று விளங்க கல்வியை நேசிக்க வேண்டுமென  அறிவுரை வழங்கி, எதிர்காலத்திலும் மாகாண சபையின் மூலம் இப்பாடசாலையின் ஏனைய தேவைகளையும்  பூர்த்திசெய்ய தனது பூரண ஆதரவு கிடைக்கும் எனவும்  தெரிவித்தார். இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்வி பணிப்பாளர், வடமாகாண கல்வி துறைசார் அதிகாரிகள், அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.