யாழ் வலி வடக்கு பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

of The Top Online Casinos (User Reviews) - AskGamblers

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்கு 31 மார்ச் 2019 அன்று காலை விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அப்பிரதேசத்தின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு பின்னராக பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளின் விடுவிப்பு தொடர்பிலான முன்னேற்ற நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டும் ஏற்கனவே பாதுகாப்பு படையினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அப்பிரதேச மக்களின் தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயும் நோக்கில் ஆளுநர் அவர்களின் இன்றைய வலி வடக்கு விஜயம் அமைந்திருந்தது.

முன்னதாக வலி வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம் மற்றும் அதனுடன் இணைந்ததாக காணப்படும் பாடசாலை மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் நேரில் ஆராய்ந்த ஆளுநர் அவர்கள் அவற்றின் விடுவிப்பு தொடர்பிலும் உயர் பாதுகாப்பு வலயத்தின் இன்னும் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் தனியார்கள் காணிகளின் விடுவிப்பு தொடர்பிலும் பாதுகாப்பு தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை வலி-வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளில் சுமார் 400 ஏக்கர் அளவிலான பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட பாதுகாப்பு தரப்பினர் இதற்கு தேவையான நிதி கிடைக்கப்பெற்றதும் இவ்விடங்களை பொதுமக்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆளுநர் அவர்களிடம் தெரிவித்தனர்.

அதன் பின்னர் அண்மையில் பாதுகாப்பு படையினர் வசமிருந்து பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட மயிலிட்டிக்கரை வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அங்குள்ள தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்ததுடன் வலி-வடக்கு மீள்குடியேற்ற சங்க தலைவர் குணபாலசிங்கம் மற்றும் கிராமிய அபிவிருத்திச் சங்க தலைவர் உருத்திரமூர்த்தி ஆகியோர் உள்ளிட்ட பொதுமக்களுடனும் கலந்துரையாடியதுடன் அவர்கள் மீளக்குடியேற்றத்தின்போது முகம்கொடுத்துவரும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி ஆரோக்கிய மாதா ஆலையத்திற்கும் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் ஆராய்ந்ததுடன் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.