யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

26.10.2023 அன்று இடம்பெற்ற கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துல, யாழ் மாவட்ட அரச அதிபர், அரச நிறுவன அதிகாரிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்ககளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. மேலும் வடமாகாண மக்களுக்கான காணி விடுவிப்பு பற்றியும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் யாழ் மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் தேவையான முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யுத்த காலத்தில் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட மக்களின் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்க்கும் முறையான வேலைத்திட்டம் யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்டத்தில் விசேட அபிவிருத்தித் திட்டங்கள் ஏதேனும் இருப்பின் அடுத்த வரவு செலவுத்திட்டத்துக்குள் உள்வாங்குவதற்கு ஏதுவாக திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார். மேலும், யாழ்.மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் குறித்து சபையின் ஒவ்வொரு அமைச்சுகள் மற்றும் திணைக்கள அதிகாரிகளிடமும் பொது மக்கள் பிரதிநிதிகள் கேட்டறிந்ததோடு, இந்தக் கலந்துரையாடலில் கடந்த குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளால் எடுத்துக்கூறப்பட்டது. இகூட்டத்தில் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.