யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா 01.01.2025 அன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ வடமாகாண ஆளுநர் திரு N.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதம செயலாளர் திரு.L.இளங்கோவன், துணைவேந்தர், பேராசிரியர் S.சிறிசற்குணராஜா, கலை, விஞ்ஞானம், இந்து நாகரிக பீடங்களின் பீடாதிபதிகள், பேராசிரியர் ரகுராமன், பேராசிரியர் ரவிராஜன் பேராசிரியர் பத்மநாதன் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின துணைவேந்தர் சார்பில் தொழில்நுட்ப கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் செந்தூரன், மகளிர் விவகாரங்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திரு P.வாகீசன், சமூக சேவைகள் பணிப்பாளர் செல்வி.S.அகல்யா மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் போது, குறிப்பாக வன்னி மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் தமது கடின உழைப்பால் அடைந்த உயர் கல்வியைத் தொடங்குவதற்கு பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டனர். நிலைமையை பகுப்பாய்வு செய்த அக் காலத்து மாகாண ஆளுநர், தேவையுடையவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இது கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. இத்திட்ட நோக்கத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிகளை வழங்கப்பட்டது. இது 2022ம் ஆண்டு வரை தொடர்ந்தது.
2024 ஆம் ஆண்டில் மாண்புமிகு ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவில் பிரதம செயலாளர், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சுக்குரிய செயலாளர் பிரதிப் பிரதம செயலாளர்கள் நிர்வாகம், நிதி மற்றும் திட்டமிடல் ஆகியோர் உள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 722 மாணவர்களும வவுனியா பல்கலைக்கழகத்தில் 41 மாணவர்களும் தங்கள் பட்டப் படிப்பைத் தொடர சிறிய தொகையாக இருந்தாலும் இந்த உதவியைப் பெறுகிறார்கள்.
2025ம் ஆண்டும் மற்றும் அதற்குப் பிறகும் மகளிர் விவகார அமைச்சும், சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் இத் திட்டம் மேலும் வலுப்படுத்தப்படும்.