யாச்திங் குறூப் அன் கொம்பனியினருடன் ஆளுநர் கலந்துரையாடல்

வட மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாச்திங் குறூப் அன் கொம்பனியின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களுடைய தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று  காலை 11.30 ற்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், யாச்திங் குறூப் அன் கொம்பனியின் உயர் மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இங்கு சுற்றுலாத்துறை மேம்படுத்தல் தொடர்பான அனைத்து விடயங்களும் யாச்திங் குறூப் அன் கொம்பனியின் பணிப்பாளரால் விரிவாக எடுத்துரைக்கபட்டது. இதன்போது  கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நல்ல சிறப்பான இடங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. அந்த வகையில் இதற்கான முதலீட்டாளர்களும் இங்கு உள்ளார்கள். எனவே இச்சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதன் மூலம் இளைஞர்களுக்கான புதிய தொழில்நுட்பக் கல்வி  அறிமுகப்படுத்தபடுவதுடன்  புதிய தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே மத மற்றும் கலாச்சார ரீதியான சுற்றுலாத்துறை அபிவிருத்தியை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது. அத்துடன் தற்போது அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுவரும் “மேட் இன் சிறிலங்கா” செயற்திட்டத்தினுள் இத்திட்டத்தினையும் உள்ளடக்குவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றியும் கௌரவ ஆளுநர் அவர்களால் ஆலோசனை முன்வைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச் சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் முதலீட்டாளர்களுக்கான சுங்கவரிசுமை மற்றும் கடற்படையினரின் சில பிரச்சினைகள் காணப்படுவதால் அதனை உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக கௌரவ ஆளுநர் அவர்களால் உறுதியளிக்கப்பட்டது.