அரசகரும மொழிக்கொள்கையை வடக்கு மாகாணசபை அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக வடக்கு மாகாணசபை உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் கூடிய செயலமர்வானது 14.11.2023 அன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப்பிரதம செயலாளர்கள், உதவிப்பிரதம செயலாளர் மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர், தேசிய மொழிப் பிரிவின் மாகாண அலுவலக பொறுப்பாளர், சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், சகல திணைக்களத்தின் தலைவர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பயிற்சியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் அரசகரும மொழிகள் திணைக்களம் நாடளாவிய ரீதியில் மொழிக்கொள்கை அமுலாக்கல் தொடர்பில் செயலாற்றுகின்றது எனவும் மொழியினை கற்பதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும் மொழியின் முக்கியத்துவத்தினையும் எடுத்துக்கூறினார். தொடர்ந்து அனைத்து அலுவலகங்களிலும் மும்மொழியில் தேர்ச்சிபெற்றவர்கள் இருந்தால் சேவைகளை பெற்றுக்கொள்வது இலகுவானது எனவும் கூறிய அவர் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மொழி தொடர்பான பயிற்சி நெறியானது வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகுடன் இணைந்து இடம்பெறுகின்றது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண முகாமைத்துவ பயிற்சி அலகின் பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தேசிய மொழிகள் திணைக்களத்தின் மூலம் மொழிக்கொள்கை அமுலாக்கலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அரச திணைக்களங்களை ஒன்றிணைக்கும் வகையில் அரசியல் அமைப்பில் மொழிக் கொள்கை அமுலாக்கம் தொடர்பில் கூறப்பட்ட விடயங்களும் கருத்தில் கொள்ளப்படுகிறது என கூறியதுடன் மொழிக்கொள்கை அமுலாக்கல் ஒவ்வொரு நிறுவன பிரதானிகள் ஊடாக செய்ய வேண்டிய தேவையுள்ளதாகவும் இதனை மொழிக்குழு ஒன்றை அமைப்பதன் மூலம் வினைத்திறனாக மேற்கொள்ளமுடியும் எனவும் கூறினார். தொடர்ந்து மொழிக்கொள்கை அமுலாக்க செயற்திட்டம் தொடர்பான காணொளியும் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வளவாளராக வடமாகாண தேசிய மொழிப்பிரிவு மாகாண அலுவலக பொறுப்பாளர் திரு.என்.உமாநாத் அவர்கள் கலந்து கொண்டு ‘மொழிக்கொள்கையினை திட்டமிடல்,மொழிக்குழு அமைத்தல்,நடைமுறைப்படுத்தல்,செயற்படுத்தல் மற்றும் செயற்படுத்தல் அலுவலகங்களில் மொழிப்பிரயோகம் எப்படி மதிப்பீடு செய்தல், புள்ளி வழங்கல், தொடர்பான முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவ்வாறாக பிரதிப்பிரதம செயலக ஆளணியும் பயிற்சியும் அலகின் செயலாளர் அவர்களின் தொகுப்புரையுடன் இச் செயலமர்வு நிறைவு பெற்றது.