மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி தொடர்பில் கலந்துரையாடல்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பாந்தாட்ட போட்டிகள் தொடர்பிலான கலந்துரையாடல் 19 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின்போது ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதுடன் இதற்கான போட்டிகள் மிகவிரைவில் ஆரம்பமாகவுள்ளதுடன் இப்போட்டியில் பங்குபற்றும் கழகங்களுக்கான பரிசுத்தொகையை ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் விளையாட்டு திணைக்களத்துடன் இணைந்து வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பாந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெறும் அணிகளுக்கு தலா 3 இலட்சம் ரூபாவும் , இரண்டாவது அணிகளுக்கு 2 இலட்சம்; ரூபா, மூன்றாவது அணிகளுக்கு 1 இலட்சம்; ரூபா மற்றும் நான்காவது அணிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் விளையாட்டு வீர , வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டுத்துறையை மேம்படுத்;தும் நோக்கோடு ஆரம்பிக்கப்படவுள்ள இப்போட்டிகள் வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளதுடன் வடமாகாணத்தின் மிகப்பெரிய கோலாகலமான விழாவாக கொண்டாட வடமாகாண ஆளுநர் அவர்கள் திட்டமிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.குருபரன், ஆளுநரின் இணைப்புச்செயலாளர் மற்றும் மாவட்ட ரீதியான வலைப்பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட கழகங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு