மன்னார் மாவட்ட அரச கால்நடை அலுவலக கட்டட திறப்புவிழா

மன்னார் மாவட்ட அரச கால்நடை அலுவலக கட்டட திறப்புவிழா 06.01.2021 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் திரைநீக்கம் செய்து கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதம செயலாளர், கால்நடை மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர், மிருக வைத்தியர்கள், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், கமநல திணைக்களத்தை முன்னேற்றிச் செல்வதிலும் வலுப்படுத்துவதற்கும் தனது பூரண பங்களிப்பு கிடைக்கும் என உறுதியளித்ததோடு, திணைக்களத்திலுள்ள ஆளணி பற்றாக்குறை வெகுவிரைவில் தீர்த்து வைக்கப்படுமெனவும், திணைக்களங்களுடைய கட்டடங்களை கட்டுவதாலும் ஆளணிகளை நிரப்புவதாலும்  அரசாங்கத்தினுடைய சுமையை கூட்டிச்செல்கின்றோம் என்பதனையும் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். அரச ஊழியர்கள் ஆகிய நாங்கள் அச்சுமையை குறைப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என சுட்டிக்காட்டியதோடு,   நாட்டினுடைய உற்பத்திக்கும் வருமானத்திற்கும் நாங்கள் எந்த அளவிற்கு பங்களிப்பு செய்கின்றோம் என எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

நாட்டினுடைய உற்பத்திக்கு பங்களிப்பு செய்யும் முக்கிய 3 துறைகளாக விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடையை அடையாளப்படுத்தியதோடு இந்த துறைகளை முன்னேற்ற வேண்டுமெனில் அனைத்தையும் அரசாங்கமே செய்யவேண்டும் எனும் எண்ணத்தை மாற்றி சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கி அவர்களூடாக தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்யவேண்டுமென சுட்டிக்காட்டினர்.

மன்னார் மாவட்டத்தின் முட்டை, கோழி இறைச்சி மற்றும் பால் தேவைகளை பற்றி கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் உள்ளூர் உற்பத்தி பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் பாரிய செலவுகளையும் சுட்டிக்காட்டினார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாய துறையை முன்னேற்ற வேண்டுமென கூறிய கௌரவ ஆளுநர் அவர்கள் நாங்கள் இன்னும் 80 வருட காலத்திற்கு முற்பட்ட முறைகளையே பின்பற்றி செயற்படுகின்றோம் எனவும் அவற்றை வினைத்திறனாக மாற்ற நாங்கள் முற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.