பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2025 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2025 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் 01.01.2025 அன்று புதன்கிழமை காலை 8.30 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண பேரவைச் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதம உள்ளக கணக்காய்வாளர்,  பணிப்பாளர் – கிராம அபிவிருத்தி திணைக்களம், ஆணையாளர் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம், ஆணையாளர் – மாகாண இறைவரி திணைக்களம்,   ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை வளாகத்திலுள்ள அலுவலகங்களின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் வடக்கு மாகாணக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பங்கேற்பாளர்களது இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின் 2025 ஆம் ஆண்டிற்கான அரச சேவைக்கான சத்தியப்பிரமாணம் பிரதிப்பிரதம செயலாளர் ஆளணியும் பயிற்சியும் அவர்களின் நெறிப்படுத்தலில் அனைத்து உத்தியோகத்தர்களாலும் “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) எனும் தலைப்பில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து சனாதிபதி செயலகத்திலிருந்து “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இன்றைய நிகழ்வுகளில் அனைத்து உத்தியோகத்தர்களும் பங்கெடுத்திருந்தனர்.